ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆடம் ஜாம்பா பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் சதத்தால் 356 ரன்களைக் குவித்தது.
அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 272 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் ஆடம் ஜாம்பா ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 123 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே 193 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 291 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஷேன் வார்னே முதல் இடத்திலும், ஆடம் ஜாம்பா 2வது இடத்திலும் உள்ளனர்.
ஒட்டுமொத்த பட்டியலில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 380 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் வார்னே 3-வது இடத்திலும், ஆடம் ஜாம்பா 7-வது இடத்திலும் உள்ளனர்.