கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை: ஆர்யவீர் சேவாக் அதிரடி சதம்: இந்தியா 309 ரன்கள் குவிப்பு

இந்திய அணியின் ஆர்யவீர் சேவாக் சதமடித்து 160 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் ஆர்யவீர் சேவாக் சதமடித்து 160 ரன்கள் குவித்தார்.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் லீக் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2வது லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

இந்தியா-யுஏஇ மோதல்

இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லக்‌ஷயா ராஜேஷ் 17 ரன்னில் அவுட்டானார்.

சதமடித்த ஆர்யவீர் சேவாக்

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆர்யவீர் சேவாக் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

2வது விக்கெட்டுக்கு ஆர்யவீர் சேவாக் - வி.கே.வினீத் ஜோடி 193 ரன்கள் சேர்த்தது.

பொறுப்புடன் ஆடிய ஆர்யவீர் சேவாக் சதமடித்து 160 ரன்னில் அவுட்டானார். வி.கே.வினீத் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT