கிரிக்கெட்

ஒரே போட்டியில் 3 சதங்கள், 51 சிக்சர்கள்: தெறிக்கவிட்ட மேஜர் லீக் தொடர் எலிமினேட்டர்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியது.

வாஷிங்டன் ப்ரீடம் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸிங் செய்து உலக சாதனை படைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்.எல்.சி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

அமெரிக்காவின் உள்ளூர் டி20 போட்டியான மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வாஷிங்டன் பிரீடம் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி பலப்பரீட்சை நடத்தியது.

ஓக்லாண்டில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களைக் குவித்தது.

குயின்டன் டி காக் 2 பவுண்டரிகள், 6 சிக்சர் உள்பட 51 ரன் குவித்து ஆட்டமிழ்ந்தார்.

சிக்சர் மழை பொழிந்த நிகோலஸ் பூரன் 31 பந்தில் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அத்துடன், மேஜர் லீக் தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 13 சிக்சர், 5 பவுண்டரி அடித்த பூரன் 106 ரன்னில் அவுட்டானார். அடுத்து அதிரடியாக ஆடிய பொல்லார்டு 64 ரன் குவித்தார்.

வாஷிங்டன் பிரீடம் அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வாஷிங்டன் பிரீடம் அணி 18.4 ஓவரிலேயே எட்டி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேசிங் சாதனையைப் படைத்தது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

3வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித், ஆண்ட்ரிஸ் கவுஸ் ஜோடி 241 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர். ஆண்ட்ரிஸ் கவுஸ் 12 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 132 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 9 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 110 ரன்கள் குவித்தனர்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களைப் பறக்கவிட்டு அசத்தியது.

இந்நிலையில், ஆண்கள் டி20 போட்டியில் 3 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசியது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

நியூயார்க் அணியின் நிகோலஸ் பூரன், வாஷிங்டன் அணியின் ஆண்ட்ரிஸ் கவுஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய 3 பேரும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.

முன்னதாக, டி20 கிரிக்கெட் வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் தலா 2 சதங்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.