32 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. தமிழக அணி தனது முதலாவது ஆட்டத்தில் ரெயில்வேயை எதிர்கொள்கிறது.
இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் முதன்மையான 20 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர். கொல்கத்தா, நியூசண்டிகார் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 6-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் பரோடா, பெங்கால், சண்டிகார், நடப்பு சாம்பியன் ஜார்கண்ட், கர்நாடகா, மிசோரம், ராஜஸ்தான், உத்தரபிரதேசமும், 'பி' பிரிவில் பீகார், டெல்லி, அரியானா, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ரெயில்வே, சவுராஷ்டிரா, 3 முறை சாம்பியனான தமிழ்நாடும், 'சி' பிரிவில் ஆந்திரா, அசாம், இமாசலபிரதேசம், மத்தியபிரதேசம், மராட்டியம், புதுச்சேரி, கேரளம், திரிபுராவும் 'டி' பிரிவில் சத்தீஷ்கார், கோவா, குஜராத், ஐதராபாத், மும்பை, ஒடிசா, உத்தரகாண்ட், விதர்பாவும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் லீக் சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளில் 16 ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் இந்தூரில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி, முகமது சைப் தலைமையிலான ரெயில்வேயுடன் (பிற்பகல் 1.30 மணி) மோதுகிறது.
மற்ற ஆட்டங்களில் பஞ்சாப்- அரியானா, மராட்டியம்- புதுச்சேரி, ஐதராபாத்-மும்பை (காலை 9 மணி), ராஜஸ்தான்- உத்தரபிரதேசம் (பிற்பகல் 1.30 மணி).
கர்நாடகா- பெங்கால், மத்தியபிரதேசம்-கேரளா. உத்தரகண்ட்-சத்தீஷ்கார் (மாலை 4.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
இந்த போட்டியில் மும்பை அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் இறங்குகிறது. இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்ட அவர் மீண்டு வருவதற்கு இந்த போட்டியை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பார்.
அந்த அணியில் ஷர்துல் தாக் குர், ஷிவம் துபே உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 15 வயது வைபவ் சூர்யவன்ஷி பீகார் அணிக்கும், சஞ்சு சாம்சன் கேரளம் அணிக்கும் கேப்டனாக உள்ளனர். சூர்யவன்ஷி பீகார் அணியை வழிநடத்த இருப்பது இதுவே முதல்முறையாகும்.
அபிஷேக் போரல், முகமது ஷமி, முகேஷ் குமார் (மூவரும் பெங்கால்), பிரித்வி ஷா, ராகுல் திரிபாதி (இருவரும் மராட்டியம்), ஹர்பிரீத் பிரார் (பஞ்சாப்), புவனேஷ்வர் குமார். யாஷ் தயாள் (உத்தரபிரதேசம்). இஷாந்த் ஷர்மா, திக்வேஷ் ரதி (இருவரும் டெல்லி), தீபக் சாஹர் (ராஜஸ்தான்).
ஷசாங் சிங் (புதுச்சேரி), வருண் சக்ரவர்த்தி, ஷாருக்கான் (இருவரும் தமிழ்நாடு). கருண் நாயர் (கர்நாடகா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாட இருப்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.