கிரிக்கெட்

3 மாதங்கள் மட்டுமே வாழ முடியும்... மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவலை பகிர்ந்த யுவராஜ் சிங்

புற்றுநோய் கண்டறியப்பட்ட போது இன்னும் 3 முதல் 6 மாதங்களில் நான் இறந்துவிடுவேன் என்று மருத்துவர் சொன்னதாக அதிர்ச்சியான தகவலை யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வானுடன் ' தி ஓவர்லேப் கிரிக்கெட்' நிகழ்ச்சியில் உரையாடியபோது பேசிய யுவராஜ் சிங், தனக்கு இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ்நாள் இருப்பதாக மருத்துவர் கூறினார் என மனம்திறந்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், உங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில், ஒரு மலையின் உச்சியில் நீங்கள் இருப்பீர்கள், பின்னர் திடீரென ஒரு பள்ளத்தில் விழுந்துவிடுவீர்கள். நான் டெல்லியில் இருந்தேன். நாங்கள் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லவிருந்தோம். கங்குலி ஓய்வு பெற்றிருந்தார். எனது டெஸ்ட் அணிக்கான இடம் அப்போதுதான் காலியாகியிருந்தது. அந்த இடத்திற்காக நான் ஏழு வருடங்களாகக் காத்திருந்தேன். அப்போது தான் எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது, 'நான் இறந்தாலும் பரவாயில்லை, எனக்கு அந்த இடம் வேண்டும்' என்று சொன்னேன். ஆனால் என் உடல்நிலை மேலும் மேலும் மோசமடைந்தது.

டாக்டர் நிதேஷ் ரோஹத்கி என்னிடம், 'கட்டி உங்கள் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையில் இருக்கிறது. ஒன்று நீங்கள் கிரிக்கெட் விளையாடச் செல்ல வேண்டும் அல்லது உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு என்ன வேண்டுமானாலும் ஆகலாம். நீங்கள் கீமோதெரபி செய்யவில்லை என்றால், வாழ்வதற்கு உங்களுக்கு இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளன என்று கூறினார். அப்போதுதான் நான் சிந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்கிற்கு சிகிச்சையளித்த டாக்டர் ஐன்ஹார்னைப் பார்க்க நான் அமெரிக்கா சென்றேன். என்னால் மீண்டும் விளையாட முடியாமல் போகலாம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு ஒரு வருடம் ஆனது. மனதளவில் அது மிகவும் கடினமாக இருந்தது. என்னை நானே ஊக்குவித்துக் கொள்ள எனக்கு ஏதோ ஒன்று தேவைப்பட்டது. நான் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், நான் யார்? நான் ஒன்றுமேயில்லை. அதைத்தான் நான் நம்பினேன்.

சிகிச்சையின் போது கூட நான் பழைய கிரிக்கெட் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அனில் கும்ப்ளே அமெரிக்காவுக்கு வந்து, என் மடிக்கணினியை மூடிவிட்டு, 'உன் உடல் நலத்தில் கவனம் செலுத்து, கிரிக்கெட் வீடியோக்களைப் பார்ப்பதை நிறுத்து' என்று சொன்னார். சச்சின் இங்கிலாந்தில் என்னை வந்து பார்த்தார். டாக்டர் ஐன்ஹார்ன் எனக்கு நம்பிக்கை அளித்தார், 'இந்த மருத்துவமனையிலிருந்து வெளியே வரும்போது, ​​உனக்கு மீண்டும் புற்றுநோய் வராது' என்று கூறினார்.

நான் திரும்பி வந்து ஆறு மாதங்களில் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடினேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, ஆனாலும் ஒரு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றேன்” என யுவராஜ் சிங் பேசியுள்ளார்.