கிரிக்கெட்

2027 ஒருநாள் உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு

2027 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது பயணத்தை அக்டோபர் 7 அன்று தொடங்குகிறது.

2027 ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. உலகக் கோப்பை தொடரை ஒட்டி முன்னணி அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.

இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான அணியை உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

ஐ.சி.சி. உலக கோப்பை தொடரில் இந்தியா தனது பயணத்தை, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் அக்டோபர் 7-ஆம் தேதியன்று தொடங்குகிறது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.

இந்தியா - பாக். போட்டி:

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தான் அணியை அக்டோபர் 10-ஆம் தேதியன்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்தியா, அக்டோபர் 14 அன்று செஞ்சுரியனில் (தற்போது ட்ஷ்வானே என அழைக்கப்படும் பிரிட்டோரியா) ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கும். அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 24 அன்று புதிதாக கட்டப்பட்ட விக்டோரியா ஃபால்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியுடன் ஒரு போட்டியில் விளையாடும்.

அக்டோபர் 17 அன்று, இந்தியா ப்ளூம்ஃபோன்டெய்னில் ஒரு தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதும். இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கேப் டவுன் மற்றும் செஞ்சுரியனில் நடைபெறும், அதேசமயம் இறுதிப் போட்டி நவம்பர் 21-ஆம் தேதியன்று வாண்டரர்ஸில் நடைபெறும்.

வெஸ்ட் இண்டீஸ் சற்றுப் பயணம்:

உலகக் கோப்பை தொடரை ஒட்டி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒருநாள் தொடரில் எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடருக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதுவரை இரு போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

SCROLL FOR NEXT