ஐ.பி.எல். 2026 தொடரில் எம்.எஸ். தோனியை காண்பதற்கான ரசிகர்களின் காத்திருப்பு தொடர்கிறது, அதேபோல காயத்தில் இருந்து ரோகித் சர்மா திரும்புவதற்கான காத்திருப்பும் தொடர்கிறது . இந்த நட்சத்திர ஜோடி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் பங்கேற்கவில்லை.
இவர்கள் தங்களது அணிகளில் இணைந்த பிறகு, 'எல் கிளாசிகோ' மோதலில் இருவரும் பங்கேற்காமல் இருந்தது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, புதன்கிழமை அன்று நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது, அவரவர் அணிகளின் பயிற்சி உடைகளை அணிந்திருந்த ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். தோனி இணைந்து பேட்டிங் செய்தனர்.
இந்த ஆண்டு ஐ.பி.எல். 'எல் கிளாசிகோ' மோதலின் முதல் கட்டப் போட்டி வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 23) நடந்தது. ஆனால் புகழ்பெற்ற எம்.ஐ. மற்றும் சி.எஸ்.கே. அணிகள் மோதலில் இரு முக்கிய கதாநாயகர்களும் விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இருவரும் மற்றொரு போட்டியிலாவது விளையாடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடப்பு ஐ.பி.எல். 2026 தொடரில் எம்.ஐ. அணிக்காக முதல் நான்கு போட்டிகளில் இடம்பெற்ற ரோகித், 10 நாட்களுக்கு முன்பு இங்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது தொடை தசைநார் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார், அதன் பிறகு அவர் மீண்டும் களத்திற்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மறுபுறம், கடந்த மாத இறுதியில் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு ஏற்பட்ட கால் தசைப்பிடிப்பு காரணமாக, தோனி இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை களமிறங்கவில்லை. சி.எஸ்.கே. அணியின் ஜாம்பவான் கேப்டன், செவ்வாய்க்கிழமை நடந்த பயிற்சி அமர்வில் முழு வீச்சில் ஈடுபட்டார். அப்போது அவர், வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வதற்கு முன்பு விக்கெட் கீப்பிங் செய்தார்.
புதன்கிழமை அன்று, அவர் சிறிது நேரம் பந்துவீசிவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டார். பின்னர் மீண்டும் களமிறங்கி, த்ரோடவுன் நிபுணர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களையும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எதிர்கொண்டார்.