விளையாட்டு

காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்: மீராபாய் சானு முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுப்பாரா?

ஜிம்னாஸ்டிக்கில் இந்திய வீராங்கனை பிரதிஸ்டா சமந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது.

2-வது நாளில் ஏமாற்றம்

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 126 பேர் பங்கேற்றனர். முதல் நாளில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. பாரா வலுதூக்கும் போட்டியில் ஜண்டு குமார் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். அதேநேரத்தில் இந்த போட்டியில் பங்கேற்ற மற்ற வீரர், வீராங்கனைகள் ஏமாற்றம் அடைந்தனர்.

போட்டியின் 2-வது நாளான நேற்று இந்தியாவுக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. இது ஏமாற்றத்தை அளித்தது.

இறுதிப்போட்டியில் சமந்தா

ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனை பிரதிஸ்டா சமந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

பெண்களுக்கான வால்ட் தனிநபர் பிரிவில் தகுதிச்சுற்றில் பங்கேற்ற அவர் 5-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 வயதான அவர் தனது 2 வால்ட் முயற்சியில் 13.025 புள்ளிகள் பெற்றார்.

இதில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான பிரனதி நாயக் 12.555 புள்ளிகளுடன் 11-வது இடம் பிடித்தார். அவர் மிக குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் நுழைவதற்கான வாய்ப்பை இழந்தார்.

அணிகள் பிரிவில் 9-வது இடம்

இதேபோல, எஷிதா ரேவாலே 15-வது இடத்தையும், நிஸ்கா அகர்வால் 19-வது இடத்தையும் பிடித்தனர். ஆல் அரவுண்ட் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி 123 புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்தைப் பெற்றது. ஆஸ்திரேலியா தங்கமும் (158.400), கனடா வெள்ளியும் (157.300), இங்கிலாந்து வெண்கலமும் (154.300) பெற்றன.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சச்சின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

லான்ஸ் பவுல்ஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

இதன் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சோனாவால் மலேசிய வீரரிடம் தோற்றார். முதல் 2 போட்டியில் வெற்றி பெற்ற அவர் 3-வது ஆட்டத்தில் தோல்வியை தழுவினார். வீல்சேர் கூடைப்பந்து, நீச்சலிலும் ஏமாற்றம் ஏற்பட்டது.

மீராபாய் சானு

இந்நிலையில், இன்றைய 3-வது நாள் போட்டியின்போது இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு பெற்றுக் கொடுப்பாரா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

48 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்கும் அவரது போட்டி இந்திய நேரப்படி மாலை 6.45 மணிக்கு தொடங்குகிறது.

மீராபாய் சானு 2018 மற்றும் 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றார். அவர் ஹாட்ரிக் தங்கம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 31 வயதான அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்தார்.