விளையாட்டு

கேலோ இந்தியா நிறைவு: 97 பதக்கங்களை குவித்து தமிழக அணி சாதனை

97 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது.இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

மாலை மலர்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம், ஆகமொத்தம் 91 பதக்கங்களை பெற்று 3-வது இடத்தில் இருந்தது.

91 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

புனேயில் 2019-ம் ஆண்டு நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது.

தற்போது அதைவிட கூடுதலான பதக்கங்களை தமிழக வீரர், வீராங்கனைகள் குவித்து முத்திரை பதித்து உள்ளனர்.

இன்று காலை நடந்த போட்டிகளில் தமிழகத்துக்கு 2 தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்தது. இன்று மதியம் நிலவரப்படி தமிழ்நாடு 37 தங்கம், 20 வெள்ளி, 37 வெண்கலம் ஆகமொத்தம் 94 பதக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக அணி பதக்க பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

இன்று பிற்பகலில் நீச்சல் பந்தயத்தில் 1 தங்கப் பதக்கமும் 2 வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் போட்டி முடிவில் தமிழக அணி 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தக்க வைத்தது.

மராட்டியம் 55 தங்கம் உள்பட 156 பதக்கங்களை குவித்து முதல் இடத்தில் உள்ளது. அரியானா 35 தங்கம் உள்பட 103 பதக்கத்துடன் 3-வது இடத்தை பிடித்தது.