விளையாட்டு

நீரஜ் சோப்ரா, யாஷ்வீர் சிங் அபாரம்: ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற இந்தியா!

இதன் மூலம் இந்தியர்கள் பதக்க மேடையில் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சவாலான வானிலை நிலவிய சூழலிலும் இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை வென்றார்; அதேவேளையில், யஷ்வீர் சிங் தனது கடைசி முயற்சியில் எதிர்பாராத விதமாக வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான 28 வயதுடைய சோப்ரா, தனது இரண்டாவது முயற்சியில் 85.83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த சீசனிலேயே தனது சிறந்த செயல்பாட்டைப் பதிவு செய்தார்; இது அவருக்கு இரண்டாவது இடத்தைபெற்று தந்தது.

ஜூன் 19 அன்று நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் போட்டியில் 85.69 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைபிடித்திருந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது செயல்பாடு அதைவிட சற்று சிறப்பாக அமைந்தது.

சிறந்த செயல்பாடு:

போட்டிகளில் முதல்முறையாக களமிறங்கிய 24 வயதான யஷ்வீர், தனது ஆறாவது மற்றும் கடைசி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் எறிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்; இதன் மூலம் இந்தியர்கள் பதக்க மேடையில் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர். இதற்கு முன் அவரது சிறந்த தனிப்பட்ட செயல்பாடாக 83.72 மீட்டர் தூரம் இருந்தது.

எதிர்பார்த்தபடியே, இலங்கை நட்சத்திர வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகே தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

குளிர் மற்றும் பலத்த காற்று வீசும் சவாலான சூழலில் வீரர்கள் போட்டியிட்ட நிலையில், அவர் 90 மீட்டருக்கு மிக அருகில் ஈட்டியை எறிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 90 மீட்டர் தூரத்தை கடந்த ஒரே ஈட்டி எறிதல் வீரர் இவர் ஆவார்.

SCROLL FOR NEXT