விளையாட்டு

Fifa 2026-ஸ்பெயினை அலறவிட்டு வரலாற்றுச் சாதனை படைத்த கேப் வெர்டே : மைதானத்திலேயே கண்ணீர் விட்ட கோல்கீப்பர் வோசின்ஹா!

அமெரிக்க விசா பாண்ட் பணத்தை எங்களால் சரியான நேரத்தில் திரட்ட முடியாததால் எனது தாயார் இந்த போட்டியை காண முடியவில்லை என கண்ணீர் விட்டார்.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கேப் வெர்டே அணி விளையாடும் முதல் உலகக் கோப்பை போட்டி இதுவாகும். குரூப்-H பிரிவில் நடந்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், 2010-ஆம் ஆண்டின் உலக சாம்பியனான பலத்த ஸ்பெயின் அணியை 0-0 என்ற கணக்கில் கேப் வெர்டே சமன் செய்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டிராவிற்கு மிக முக்கியக் காரணம் அந்த அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா தான். ஆட்டத்தின் போது ஸ்பெயின் வீரர்களின் 7 அபாரமான கோல் முயற்சிகளை அவர் தடுத்து நிறுத்தி, 'ஆட்டநாயகன்' விருதையும் வென்றார்.

போட்டி முடிந்தவுடன் வோசின்ஹா ஆனந்தக் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசுகையில்: இந்த உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அமெரிக்காவின் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் விசா விதிமுறைகளின்படி, கேப் வெர்டே உட்பட சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா கட்டணத்துடன் கூடுதலாக $15,000 டாலர் (சுமார் 12.5 லட்சம் இந்திய ரூபாய்) விசா பாண்ட் தொகையாகச் செலுத்த வேண்டும்.

இந்தத் தொகை அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது திரும்பக் கொடுக்கப்படும் என்றாலும், உடனடியாக இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாததால், வோசின்ஹாவின் தாயாருக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்கவில்லை. "எனது வாழ்வின் எல்லாமே எனது தாத்தா-பாட்டி தான். அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் இந்தத் தருணத்தில் என்னுடன் இல்லை.

அதேபோல, அமெரிக்க விசா பாண்ட் பணத்தை எங்களால் சரியான நேரத்தில் திரட்ட முடியாததால் எனது தாயாரும் இந்த வரலாற்றுப் போட்டியைக் காண மைதானத்திற்கு வர முடியவில்லை. அவர்கள் இங்கு இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அதுதான் என் அழுகைக்குக் காரணம் என்றார். தொடர்ந்து, நான் எனது 25 வயதில், 2012-ல் தான் தொழில்முறை கால்பந்து விளையாடத் தொடங்கினேன். இந்த ஒரு கனவுக்காகவே 40 வயதிலும் தொடர்ந்து உழைத்தேன். இந்த விருது என் அணி வீரர்கள் அனைவருக்கும் சொந்தமானது" என்று வோசின்ஹா தெரிவித்தார்.

சுமார் 5 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிறிய தீவு நாடான கேப் வெர்டே, உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே ஸ்பெயினை அலறவிட்டு ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தாயார் வராத சோகம் இருந்தாலும், வோசின்ஹா தனது தாய்நாட்டைப் பெருமைப்பட வைத்துள்ளார்.