பெஜியா:
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் குகேஷ், சீன வீராங்கனை ஜூ வென்ஜூன் ஆகியோருடன் மோதப் போகும் வீரர், வீராங்கனை யார்? என்பதை நிர்ணயிப்பதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 8 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். அதாவது 14-வது சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரர், வீராங்கனை பட்டத்தை வெல்வதுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெறுவர்.
ஆண்கள் பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்திய இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நேற்று 2-வது சுற்றில் சீனாவின் வெய்யியுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 48-வது நகர்த்தலில் டிரா கண்டார். பேபியானா கருணா (அமெரிக்கா) - அனிஷ் கிரி இடையிலான மற்றொரு ஆட்டமும் சமனில் முடிந்தது.
பெண்கள் பிரிவில் முதல் நாள் போன்றே 2-வது நாள் ஆட்டங்களும் அனைத்தும் டிராவில் முடிந்தன. இதில் இந்தியாவின் ஆர்.வைஷாலி, திவ்யா தேஷ்முக் நேருக்கு நேர் மோதிய ஆட்டம் 46-வது நகர்த்தலில் டிரா ஆனதும் அடங்கும்.