விளையாட்டு

யுவராஜ்சிங் சாதனையை முறியடிப்பது எளிதல்ல- அபிஷேக் சர்மா

அபிஷேக் சர்மா 20 ஓவர் போட்டியில் 11-வது சதத்தை பதிவு செய்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி தொடரை கைப்பற்றியது.

அபிஷேக் சர்மா அதிரடி

வெல்லிங்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. இந்த இலக்கை இந்திய அணி 40 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது.

13.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.

இந்தியாவின் அபார வெற்றிக்கு அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டமே காரணம். அவர் 38 பந்துகளில் 113 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரியும், 11 சிக்சர்களும் அடங்கும்.

மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 19 பந்தில் 45 ரன் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 133 ரன் எடுத்து சாதித்தனர்.

பவர் பிளேயில் சாதனை

இந்த ஆட்டத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. இந்திய அணி பவர் பிளேயில் (முதல் 6 ஓவர்) 118 ரன் எடுத்தது. இது 20 ஓவர் சர்வதேச போட்டியில் சாதனையாகும். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு செர்பியாவுக்கு எதிராக ருமேனியா 116 ரன் (5.4 ஓவர்) எடுத்ததே சாதனையாக இருந்தது.

20 ஓவர் போட்டியில் 2-வது சிறந்த நிலையாகும். 2024 ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டலுக்கு எதிராக சன்ரைசஸ் ஐதராபாத் 125 ரன் எடுத்து இருந்தது.

இந்திய அணி 7.4 ஓவரில் 150 ரன்னை குவித்தது. 20 ஓவர் போட்டியில் இது அதிவேக ரன் குவிப்பாகும். இதே போல 2.2 ஓவரில் 50 ரன் எடுத்து சாதனையை சமன் செய்தது.

அபிஷேக் சர்மா 20 ஓவர் போட்டியில் 11-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் விராட் கோலியை முந்தினார். சர்வதேச போட்டியில் 4-வது சதத்தை எடுத்த 3-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். ரோகித் சர்மா (5 சதம்), சூர்யகுமார் யாதவ் (4) ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.

எளிதானது அல்ல

இந்த நிலையில் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 12 பந்தில் அரை சதம் அடித்த யுவராஜ்சிங் சாதனையை முறியடிப்பது எளிதானது அல்ல என்று அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

அந்தக் காலத்தில் யுவராஜ் சிங் என்ன மாதிரியான கிரிக்கெட் விளையாடினார் என்பது எனக்கு தெரிய வில்லை. ஆனால் 12 பந்துகளில் அரைசதம் அடிப்பது அவ்வளவு எளிது கிடையாது.

எந்த ஒரு பேட்ஸ்மேனும் யுவராஜ் சிங்கின் சாதனையை அவ்வ ளவு எளிதில் முறியடித்துவிட முடியாது. இதுபோன்ற சாதனைகள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே படைக்கப்படும்.

சாதனைக்காக ஆடவில்லை

நாங்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. அணியின் வெற்றிக்காக அனைத்து வீரர்களும் விளையாடுகிறோம். நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் எளிதாக உள்ளது எனக்கூற மாட்டேன்.

இந்த வெற்றிக்கு பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் அணியின் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

அபிஷேக் சர்மா ஏற்கனவே 14 பந்தில் அரை சதம் அடித்து இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் 15 பந்தில் 50 ரன்னை எடுத்தார்.

SCROLL FOR NEXT