2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க பயணத்தில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் புயலை கிளப்பி உள்ளது.
கேப்டவுன் டெஸ்டில் உப்புத்தாளை (சான்ட்பேப்பர்) பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்றியதற்காக அப்போதைய கேப்டன் ஸ்டீவ் சுமித் , வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டும், கேமரூன் பான்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா சமீபத்தில் எழுப்பினார். பந்தை சேதப்படுத்தியது ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் முன்கூட்டியே தெரியும் என்று அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருந்தார். இதை கேப்டன் கம்மின்ஸ் நிராகரித்தார்.
இதற்கிடையே கவாஜாவுக்கு ஆதரவாக பந்தை சேதப்படுத்தியது அணியில் உள்ள எல்லாருக்கும் தெரியும் என்று இதில் நடவடிக்கை எடுக்கப்பட்ட பான்கிராப்ட் கூறியுள்ளார்.
இந்தநிலையில் வீரர்கள் நேர்மையாக இருக்க வேண்டும், தவறுகளை ஒப்புக் கொள்பவர்களை ஆஸ்திரேலியர்கள் மன்னிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பான்கிராப்ட் 8 ஆண்டுகளாக மனதிற்குள் அடக்கி வைத்திருந்ததை நினைத்து அவருக்காக வருந்துகிறேன். அவரை நினைத்து மனம் மிகவும் நொந்துபோகிறேன். அதை இப்போது சொன்னதால் எவ்வளவு நிம்மதி அடைந்துள்ளார் என்பதை அவரது குரலிலேயே கேட்க முடிகிறது.
அந்த குற்றம் சரி செய்யப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையாக இருந்தது என்று நினைக்கிறேன், ஆனால் அவர்கள் அதை சரி செய்துவிட்டார்கள்.
அந்த உண்மை தொடர்ந்து வெளிவரும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மக்களிடம் பொய் சொல்லும்போது பிடிபட்டால், அதை அப்படியே புறக்கணித்துவிட்டு முன்னேறி செல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.
வீரர்கள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தவறாக பேசி இருந்தாலோ, பொய் சொல்லி இருந்தாலோ, அல்லது முழு உண்மையையும் சொல்லாமல் விட்டிருந்தாலோ, அதை ஒப்புக்கொண்டு ஆம் தவறு செய்து விட்டேன், நான் செய்தது தவறு, மன்னிக்கவும்’ என்று சொல்வதற்கான சுதந்திரமும், வசதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.
ஏனென்றால் ஆஸ்திரேலிய நாடு மன்னிக்கும். ஒருவர் சோர்ந்து இருக்கும்போது, அவருக்கு ஆதரவு காட்டுவதற்கு ‘ஒருவர் உள்ளே, அனைவரும் உள்ளே’ என்பதுதான் ஆஸ்திரேலிய வழி.
இவ்வாறு கிளார்க் கூறி உள்ளார்.