5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் போட்டிகள் நிறைவடைந்தது.
கடைசி நாளில் 9 தங்கப் பதக்கத்துக்கான வில்வித்தை, போஷியா, வலுதூக்குதல், வீல்சேர் வாள்வீச்சு ஆகிய போட்டிகள் நடந்தது.
போட்டியின் முடிவில் சீனா 207 தங்கம், 116 வெள்ளி, 111 வெண்கலம் ஆக மொத்தம் 434 பதக்கம் பெற்று முதல் இடத்தை பிடித்தது.
ஜப்பான் 64 தங்கம், 60 வெள்ளி, 62 வெண்கலம் ஆக மொத்தம் 186 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், உஸ்பெகிஸ்தான் 45 தங்கம், 49 வெள்ளி, 51 வெண்கலம் ஆக மொத்தம் 145 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தது.
பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது. 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் ஆக மொத்தம் 114 பதக்கம் கிடைத்தது. கடந்த முறையை விட இந்தியா தற்போது அதிக பதக்கங்களை குவித்து புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் 27 தங்கம், 32 வெள்ளி, 49 வெண்கலம் ஆக மொத்தம் 108 பதக்கம் கிடைத்தது. தற்போது கூடுதலாக 3 தங்கம் வந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 6 பதக்கம் அதிகமாக கிடைத்தது.
மேலும், முதல் முறையாக 4-வது இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்தது. கடந்த முறை 6-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது.
நேற்றைய கடைசி நாளில் இந்தியா 9 தங்கம் உள்பட 26 பதக்கத்தை பெற்றது. இதன் மூலம்தான் அதிக அளவில் பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைக்க முடிந்தது.
தடகள போட்டியில் அதிகபட்சமாக 22 தங்கம் உள்பட 65 பதக்கம் கிடைத்தது.
அதற்கு அடுத்தபடியாக பேட்மிண்டனில் 3 தங்கம் உள்பட 16 பதக்கமும், வில்வித்தையில் 3 தங்கம் உள்பட 6 பதக்கமும் கிடைத்தன. துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம் உள்பட 5 பதக்கம் கிடைத்தது.
நீச்சல், வலுதூக்குதல், ஜூடோ, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளிலும் பதக்கங்களை பெற்றன.
ஷீத்தல் தேவி (வில் வித்தை), நிஷாத் குமார், சிம்ரன் சர்மா, திலீப் கவித், பிரணவ் சூர்ணா (தடகளம்), மோனா அகர்வால் (துப் பாக்கி சுடுதல்) ஆகியோர் இரட்டை தங்கம் வென்றனர்.
ஷீத்தல் தேவி (2 தங்கம், 1 வெள்ளி), தமிழகத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசி முருகேசன் (1 தங்கம், 2 வெள்ளி), நீச்சல் வீரர்கள் ரவி புதிகினா (2 வெள்ளி, 1 வெண்கலம்), ஷீமாசு நந்தல் (3 வெண்கலம்) ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 பதக்கங்களை கைப்பற்றினார்கள்.