விளையாட்டு

ஆசிய பாராலிம்பிக்: இன்று மேலும் 5 தங்கம்..!- 100 பதக்கங்களை குவித்த இந்தியா

இந்திய வீரரான அஜய்குமார் வெண்கல பதக்கம் பெற்றார்.

5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வருகிறது.

மேலும் 5 தங்கம்

4-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 21 தங்கம், 26 வெள்ளி, 41 வெண்கலம் ஆக மொத்தம் 88 பதக்கம் பெற்று இருந்தது. நேற்று ஒரே நாளில் 26 பதக்கம் கிடைத்தது.

ஷீத்தல் தேவி (வில்வித்தை), நிஷாத் குமார், சிம்ரன் சர்மா, திலீப் கவித் (தடகளம்) ஆகியோர் இரட்டை தங்கம் வென்றனர். ஷீத்தல் தேவி (2 தங்கம், 1 வெள்ளி), நீச்சல் வீரர் ரவி புதிகினா (2 வெள்ளி, 1 வெண்கலம்) ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 பதக்கம் பெற்றுள்ளனர்.

5-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 தங்கம் கிடைத்தது. அதோடு 7 வெள்ளியும், 2 வெண்கலமும் பெற்றன. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-யை தாண்டியது.

வில்வித்தை

வில்வித்தை போட்டியில் ரிகர்வ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. ஹர் வீந்தர் சிங் - விஜய் சண்டி ஜோடி 5-1 என்ற கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இதேபோல பெண்களுக்கான ரிகர்வ் இரட்டையர் பிரிவில் பூஜா ஜாத்யான்- பாவ்னா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் 0-6 என்ற கணக்கில் சீனா ஜோடியிடம் தோற்றது.

சந்தீப் புதிய உலக சாதனை

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் டி64 பிரிவில் சந்தீப் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு புதிய உலக சாதனையும் படைத்தார். அவர் பந்தய தூரத்தை 52.28 வினாடியில் கடந்து அனைத்து சாதனைகளையும் முறியடித்தார்.

இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான அஜய்குமார் வெண்கல பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 53.61 வினாடியில் கடந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனை படைத்தார்.

ஈட்டி எறிதலிலும் சாதனை

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப் 37/38 பிரிவில் இந்தியாவின் ஹானி தங்கம் வென்றார். அவர் 60.49 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்தார். இது புதிய உலக சாதனையாகும்.

ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் டி46 பிரிவில் பிரமோத்தும் (4 நிமிடம் 9.65 வினாடி), பெண்களுக்கான நீளம் தாண்டுதல் டி 47 பிரிவில் நிமிஷாவும் (5.37 மீட்டர்) வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

பேட்மிண்டன்

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்தது. எஸ்.எல்.3 பிரிவில் நிதிஷ்குமாரும், எஸ்.எல்.4 பிரிவில் நவீன் சிவக்குமாரும் தங்கம் வென்று பெருமை சேர்த்தனர்.

நிதிஷ் குமார் இறுதிப் போட்டியில் சகநாட்டை சேர்ந்த பிரமோத் பகத்தை 21- 18, 21-6 என்ற கணக்கில் வீழ்த்தினார். நவீன் சிவக்குமார் 21- 9, 21-17 என்ற கணக்கில் இந்தோனேசிய வீரரை தோற்கடித்தார்.

துளசிமதிக்குவெள்ளி

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். அவர் இறுதிப் போட்டியில் 18- 21, 11-21 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் தோற்றார்.

அவர், மேலும் 2 பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். 24 வயதான துளசிமதி பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார்.

102 பதக்கம்

இன்று காலை நிலவரப்படி இந்தியா 26 தங்கம், 33 வெள்ளி, 43 வெண்கலம் ஆக மொத்தம் 102 பதக்கம் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT