விளையாட்டு

ஆசிய பாரா 5ஆம் நாள் ஆட்டம்: ஆடவர் வில்வித்தை, பேட்மிண்டனில் தங்கம்.. துளசிமதி முருகேசன் வெள்ளி

துளசிமதி முருகேசன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 90 ஆக உயர்த்தியுள்ளார்.

2026 ஆசிய பாரா போட்டிகள் 5 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் கடந்த 18 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஏற்கனவே 88 பதக்கங்களை வென்ற இந்திய அணி, 100 பதக்கங்கள் என்ற இலக்கைக் கடக்கும் உறுதியுடன் போட்டிகளின் 5ஆம் நாளான இன்று களமிறங்கியுள்ளது.

5 ஆம் நாள் ஆட்டம்

இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்ட தொடக்கத்தில் வெவ்வேறு பிரிவுகளில் இந்தியாவுக்கு தங்கமும் வெள்ளியும் வாய்த்துள்ளது.

ஆடவர் வில்வித்தை

பாரா வில்வித்தை ஆடவர் ரிகர்வ் குழுப் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்கும் விஜய் சுண்டியும் தங்கம் வென்றனர். இது இன்றைய போட்டிகளில் இந்தியா வென்ற முதல் தங்கம் ஆகும்.

முதல் செட்டை 35-35 என சமன் செய்த இந்த ஜோடி, அடுத்த இரண்டு செட்களையும் 37-36 மற்றும் 38-36 என்ற கணக்கில் வென்று சீனாவிற்கு எதிராக 5-1 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்து தங்கத்தை தட்டிச் சென்றது.

மகளிர் வில்வித்தை

பாரா வில்வித்தை மகளிர் ரிகர்வ் இரட்டையர் போட்டியில், இந்தியாவின் பவானா மற்றும் பூஜா ஜோடி சீனாவிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

சீனா 38-31, 35-30, மற்றும் 39-29 என்ற செட் கணக்கில் வென்று தங்கத்தை தட்டிச் சென்றது.

பேட்மிண்டன்

ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்4 பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நவீன் சிவகுமார் தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியாவின் ஃபெர்டி செட்டியாவானை 21-9, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அவர் முதலிடத்தைப் பிடித்தார்.

ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், தீர்மானிக்கும் சுற்றில் சக வீரரான பிரமோத் பகத்தை வீழ்த்தி நிதேஷ் குமார் முதலிடத்தைப் பிடித்தார்.

நிதேஷ், பிரமோத்தை 21-18, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி, நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

துளசிமதி முருகேசன்

இதனிடையே துளசிமதி முருகேசன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 90 ஆக உயர்த்தியுள்ளார்.

அவர் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் SU5 இறுதிப் போட்டியில் சீனாவின் கியுக்சியா யாங்கிடம் 18-21, 11-21 என்ற புள்ளிக்கணக்கில் கடுமையாகப் போராடி தோல்வியடைந்தபோதிலும் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஓட்டப்பந்தயம்

ஆடவர் 1500 மீட்டர் T46 பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து இந்தியாவின் பர்மோத் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் 4:09.65 என்ற நேரத்தில் பந்தயத்தை முடித்தார்.

இலங்கையின் புவக்பிதிகண்டே பி. வஹம்புரேகா 4:03.25 நிமிடங்களில் இலக்கை கடந்து புதிய சாதனையுடன் தங்கத்தை வென்றார்.

நீளம் தாண்டுதல்

மகளிர் T47 நீளம் தாண்டுதல் போட்டியில் நிமிஷா சக்குங்கல்பரம்பில் மூன்றாவது முயற்சியில் 5.52 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பூப்பந்து

மகளிர் ஒற்றையர் SH6 பூப்பந்து இறுதிப் போட்டியில், சீனாவின் ஃபெங்மெய் லீயிடம் 12-21, 13-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்த நித்யா ஸ்ரீ, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். லீ தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT