20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்சி- நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. 12-வது நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.
11-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் ஆக மொத்தம் 60 பதக்கம் பெற்று இருந்தது. துப்பாக்கி சுடுதல் போட்டியின் பெண்கள் தனிநபர் டிராப் பிரிவில் நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிர் கிரிக்கெட் போட்டியிலும், துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவிலும் (கமல்ஜித்- சுருஜி சிங்), கபடி பெண்கள் பிரிவிலும், ஆண்கள் பிரிவிலும் , பெண்களுகான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள், கலப்பு, ஆண்கள் ஆகிய 3 பிரிவுகளிலும், துப்பாக்கி சுடுதல் டிராப் கலப்பு அணிகள் பிரிவிலும் ( நீரு தண்டா- கைனன் செனாய்) தங்கப்பதக்கம் கிடைத்தது.
இன்று காலை இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் கிடைத்தது. பாய்மர படகு போட்டியில் வெள்ளியும், ஸ்குவாஷ் மூலம் வெண்கலமும் கிடைத்தன.
ஆண்களுக்கான படகு போட்டியில் ‘ஸ்கிப்’ பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பிரின்ஸ் குரிசின்கல் நோபல் - மனு பிரான்சிஸ் ஆகியோர் அடங்கிய இந்திய ஜோடி 23 நெட்’ புள்ளிகள் மற்றும் மொத்தமாக 29 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
பாய்மர படகில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும். சீனாவுக்கு தங்கமும், ஹாங்காங் வெண்கலமும் பெற்றன.
பெண்கள் ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் இந்திய அணி லீக் சுற்றில் சீனா (2-1), ஜப்பான்( 2-1), ஈரான் (3-0) ஆகியவற்றையும், கால்இறுதியில் சிங்கப்பூரையும் (2-0) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
இன்று காலை நடைபெற்ற அரை இறுதியில் இந்திய மகளிர் அணி ஹாங்காங்கை எதிர் கொண்டது. இதில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. அரை இறுதி வரை வந்ததால் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
முதல் போட்டியில் அனஹத் சிங் 11-9, 11-8, 6-11,11-13, 10-12 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார். 2-வது ஆட்டத்தில் தன்வி கன்னா 4-11, 13-11, 11-9, 13-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
3-வது போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா 4-11, 7-11, 9-11 என்ற கணக்கில் தோற்றார். இதனால் அனஹத் சிங், தன்வி கன்னா, ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் அடங்கிய அணிக்கு வெண்கலம் கிடைத்தது. ஸ்குவாஷில் கிடைத்த 4-வது பதக்கமாகும்.
அபய் சிங், வீர் சோத் ராணி, வேலவன் செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் ஸ்குவாஷ் அணி சீனா (3-0), தென் கொரியா (3-0) ஆகியவற்றையும், கால்இறுதியில் குவைத்தையும் (2-0) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
இன்று பிற்பகல் நடை பெறும் அரைஇறுதியில் இந்திய அணி மலேசியாவை சந்திக்கிறது.
இன்று காலை நிலவரப்படி இந்தியா 10 தங்கம், 22 வெள்ளி, 30 வெண் கலம் ஆக மொத்தம் 62 பதக்கம் பெற்று இருந்தது.