விளையாட்டு

ஹாக்கி: மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இன்று சீனாவுடன் மோதும் இந்தியா

மாலை 4.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அரை இறுதியில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சீனாவுடன் இன்று மோதுகிறது.

இந்திய அணி அசத்தல்

9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு நடந்த இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் அணியுமான இந்தியா, 19-வது இடத்தில் உள்ள மலேசியாவை எதிர்கொண்டது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை துவம்சம் செய்து 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இந்திய அணியில் மும்தாஜ் கான் (10-வது நிமிடம்), நவ்னீத் கவுர் (18-வது நிமிடம்), தீபிகா (25-வது, 30-வது நிமிடம்), சுனிலிதா டாப்போ (33-வது நிமிடம்), இஷிகா (57-வது நிமிடம்) கோலடித்தனர். மலேசியா தரப்பில் நூர் அஜார் 27-வது நிமிடத்திலும், நுராமிராக் சுகிபி 52-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர்.

ஜப்பானுக்கு பதிலடி கொடுத்த சீனா

மற்றொரு அரை இறுதியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான சீனா, முன்னாள் சாம்பியனான ஜப்பானுடன் மல்லுக்கட்டியது.

பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு செல்லும் என்றும் எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் 60-வது மற்றும் கடைசி நிமிடத்தில் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீராங்கனை ஜாங் ஹியாங் கோலடித்தார்.

முடிவில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததுடன், லீக் சுற்றில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SCROLL FOR NEXT