விளையாட்டு

இந்திய அணி கடைசி வரை விளையாடி இருக்க வேண்டும்- சுப்மன் கில்லின் முடிவை விமர்சித்த அஸ்வின்!

சுப்மன்கில் அளித்த பதிலை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கிண்டல் செய்து விமர்சித்து உள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிரா ஆனது.

கடைசி வரை ஆடி இருக்க வேண்டும்

நியூசிலாந்து அணி போராடி ‘டிரா’ செய்து தோல்வியை தவிர்த்தது. 6-வது விக்கெட்டான டேரில் மிச்சேல் - கிளன் பிலிப்ஸ் ஜோடியின் தடுப்பாட்டம் இந்தியாவின் வெற்றி முயற்சியை பாதித்தது.

போட்டி முடிய ஒரு மணி நேரம் இருந்தபோது டிராவில் முடித்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வெற்றி முயற்சிக்காக இந்திய அணி கடைசி வரை ஆடி இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆர். அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வெற்றிக்காக முயற்சி

வெலிங்டன் டெஸ்டில் கடைசி ஒரு மணி நேரம் (15 ஓவர்) இந்திய அணி விளையாடி இருக்க வேண்டும், வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை வீரர்களிடம் இல்லை. இந்தியாவின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்பட்டன.

மீதமுள்ள ஓவர்களில் விக்கெட்டை கைப்பற்ற முயற்சித்து பார்த்து இருக்கலாம். போட்டியில் திடீரென என்ன நடக்கும் என்பது ஒருபோதும் யாருக்கும் தெரியாது.

போட்டியை தொடர்ந்து இருந்தால் இந்திய அணி வென்று இருக்கும் என்று கூறவில்லை. ஆனால் வெற்றிக்காக முயற்சி செய்திருக்கலாம்.

இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

பீட்டர்சனும் விமர்சனம்

கூடுதலாக 10 ஓவர் வீசி இருந்தாலும் நியூசிலாந்தின் விக்கெட்டை கைப்பற்றி இருக்க முடியாது என்று கேப்டன் சுப்மன் கில் முன்னதாக ஆட்டத்தை முடித்தது குறித்து விளக்கம் அளித்து இருந்தார்.

இதேபோல சுப்மன்கில் அளித்த பதிலை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கிண்டல் செய்து விமர்சித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

சுப்மன் கில்லின் முடிவு நம்ப முடியாதது. அப்படி என்றால் கடைசி ஒரு மணி நேரத்தில் 5 விக்கெட்டுகள் இதற்கு முன்பு எடுக்கப்பட்டது இல்லையா?

இவ்வாறு பீட்டர்சன் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

தடுப்பாட்டத்துக்கு பாராட்டு

இதற்கிடையே சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் மிட்செல்-பிலிப்ஸ் ஜோடியை இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மிட்செல்-பிலிப்ஸ் இணைந்து 300 பந்துகளுக்கும் அதிகமாக விளையாடியது மிகப் பெரிய விஷயம். ஆடுகளம் அவர்களுக்கு உதவும் விதமாக இருந்தது உண்மை தான். ஆனால் இருவரும் மிகவும் அற்புதமாக ஆடினர்.

விக்கெட்டை இழக்காமல் அவர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு இர்பான் பதான் கூறியுள்ளார்.

மிட்செல் 186 பந்துகளில் 49 ரன்னும், பிலிப்ஸ் 126 பந்துகளில் 26 ரன்னும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

SCROLL FOR NEXT