விளையாட்டு

நிறைவேறாமல் போன டெஸ்ட் கனவு... சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன சாஹல்!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல், சர்வதேச முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காகத் தொடர்ந்து விளையாடுவேன் என்றும், கிரிக்கெட் மீதான தாகம் இன்னும் அடங்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது ஓய்வு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

நான் முதன்முதலில் கையில் ஏந்திய கிரிக்கெட் பந்து ஒரு சிவப்பு நிறப் பந்து. அப்போது எனக்கு வயது 10; அந்த விளையாட்டின் மீது எனக்கு எவ்வளவு ஆழமான ஈர்ப்பு ஏற்படப்போகிறது என்பது பற்றி அப்போது எனக்குத் துளியும் தெரிந்திருக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை, சிவப்புப் பந்து கிரிக்கெட் என்பது வெறும் மற்றொரு ஆட்ட வடிவம் மட்டுமல்ல. பொறுமை, ஆளுமை, மன உறுதி மற்றும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் போராடி மணிக்கணக்கில் களத்தில் நிற்பதில் உள்ள தூய மகிழ்ச்சி ஆகியவற்றை நான் கற்றுக்கொண்டது இந்த ஆட்டத்தில்தான்.

லார்ட்ஸ் மைதானத்தில் எனது கடைசி 'ஃபர்ஸ்ட்-கிளாஸ்' போட்டியை விளையாடினேன். இதைச் சொல்வதே உணர்வுப்பூர்வமானதாக இருக்கிறது; ஏனெனில், 'டெஸ்ட்' கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது பல ஆண்டுகளாக நான் சுமந்து வந்த ஒரு கனவு.

அது நிறைவேறாமல் போயிருக்கலாம், ஆனால் நான் கடந்து வந்த பாதையில் உண்மையான மனநிறைவு கொள்கிறேன்; இந்த ஆட்ட வடிவத்தில் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

சிவப்புப் பந்து என் வாழ்க்கையின் மிக அழகான நினைவுகளை எனக்கு அளித்தது; அதை என்னிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது.

ஆனால், என் பயணம் இன்னும் முடியவில்லை.

என் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற தாகம் இன்னும் என்னுள் உயிர்ப்புடன் இருக்கிறது. என்னிடம் இன்னும் கிரிக்கெட் ஆடும் திறன் இருப்பதாக நான் நம்புகிறேன்; ஒருநாள் (ODI) மற்றும் டி20 (T20) போட்டிகளில் மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

என் பயணத்தின்போது தொடர்ந்து ஆதரவும், நம்பிக்கையும் அளித்த ஹரியானா கிரிக்கெட் சங்கம், ரன்பீர் சிங் மஹிந்திரா மற்றும் அனிருத் சிங் சௌத்ரி ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்முறையாகச் சிவப்புப் பந்தைக் கையில் ஏந்திய 10 வயதுச் சிறுவன் முதல், தனது கடைசி 'ஃபர்ஸ்ட்-கிளாஸ்' போட்டியை விளையாடிய வீரர் வரை... இது ஒரு அற்புதமான பயணம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாஹல் தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் 49 போட்டிகளில் விளையாடி, 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் ஆகும்.

SCROLL FOR NEXT