விளையாட்டு

ஹர்திக்கின் பங்களிப்பை மும்பை இந்தியன்ஸ் மறக்காது: ஆகாஷ் அம்பானி பாராட்டு!

ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, அணியின் பந்துவீச்சுத் துறையை பலப்படுத்தும் வகையில் அர்ஷ்தீப் சிங் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறியது குறித்து, அணியின் இணை உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பாராட்டிபேசியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் எதிர்பாராத விதமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு வீரர் பரிமாற்றம் நடந்துள்ளது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும் கேப்டனுமாகச் செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின்படி, ஹர்திக் பாண்டியா ரூ.18 கோடி மதிப்பில் பஞ்சாப் அணிக்குச் செல்கிறார். இதற்குப் பதிலாக, பஞ்சாப் அணியின் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அதே ரூ.18 கோடி மதிப்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளார்.

ஆகாஷ் அம்பானி பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறியது குறித்து, அணியின் இணை உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பாராட்டிபேசியுள்ளார். ஹர்திக் பாண்டியாவுடன் மும்பை அணி பல சிறப்பான தருணங்களைப் பகிர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு இளம் கிரிக்கெட் வீரராக அவர் வளர்ந்ததையும், உலக அரங்கில் சாதனை படைத்ததையும், பின்னர் அணிக்குத் திரும்பி கேப்டனாகப் பொறுப்பேற்றதையும் மும்பை அணி பெருமையுடன் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். மைதானத்தில் அவர் வெளிப்படுத்திய ஆற்றலும், வெற்றியைக் காணும் தீவிர போட்டி மனப்பான்மையும் மும்பை அணியின் வெற்றிகளில் மிக முக்கியமான பங்கு வகித்ததாக அவர் புகழ்ந்துள்ளார். மேலும், ஹர்திக்கின் எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

அர்ஷ்தீப் சிங்

ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, அணியின் பந்துவீச்சுத் துறையை பலப்படுத்தும் வகையில் அர்ஷ்தீப் சிங் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆகாஷ் அம்பானி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான அர்ஷ்தீப் சிங்கின் வருகை மும்பை அணியின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அனுபவம் வாய்ந்த திறமையான வீரர் அர்ஷ்தீப் சிங், மும்பை அணியின் நீல மற்றும் தங்க நிற ஜெர்சியில் களமிறங்குவதை வரவேற்பதாக அவர் கூறினார். பஞ்சாப் அணிக்காக 96 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங்கின் வருகை, வரும் ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT