விளையாட்டு

காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதல் பிரவில் வெள்ளி வென்றார் அஜய பாபு

அஜய பாபு மிகக் குறைந்த வித்தியாசத்தில் தங்கத்தை நழுவவிட்டார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், வேகமாக முன்னேறி வரும் இந்திய பளுதூக்குதல் வீரரான வல்லூரி அஜய பாபு, ஆண்களுக்கான 79 கிலோ பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றார்; இதன் மூலம் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றிகரமான பயணத்தை அவர் தொடர்ந்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான இவர், 'ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 149 கிலோவையும் (இது ஒரு போட்டி சாதனையாகும்), 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) பிரிவில் 181 கிலோவையும் தூக்கி, மொத்தம் 330 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

விறுவிறுப்பான போட்டி:

நேற்று (திங்கள்கிழமை) இரவு நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது மொத்தம் 331 கிலோ (147 + 184 - இதுவும் ஒரு போட்டி சாதனையாகும்) எடையை தூக்கி தங்க பதக்கத்தை வென்ற நிலையில், அஜய பாபு மிகக் குறைந்த வித்தியாசத்தில் தங்கத்தை நழுவவிட்டார்.

நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்தியா வென்ற ஆறாவது பதக்கம் இதுவாகும்.

இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே மொத்தம் 325 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

முதலில், ஹிதாயத் 181 கிலோ எடையைத் தூக்கி போட்டி சாதனையை முறியடித்தார்; ஆனால் சில நொடிகளிலேயே இந்திய வீரரான அஜய பாபு தனது கடைசி முயற்சியில் அதே 181 கிலோ எடையைத் தூக்கி, மொத்த எடையில் 330 கிலோ என்ற புதிய சாதனையை படைத்து முந்தினார்.

எனினும், ஹிதாயத் தனது கடைசி முயற்சியில் 184 கிலோ எடையை தூக்கி மீண்டும் சாதனையை முறியடித்து தங்க பதக்கத்தை வென்றார்.

கடைசி முயற்சி:

முன்னதாக, 'ஸ்னாட்ச்' பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கும் இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்த அஜய பாபு, தனது கடைசி முயற்சியில் அந்த எடையைத் தூக்கி சிறப்பான ரீ-என்ட்ரியை வெளிப்படுத்தினார். இதன் மூலம் புதிய போட்டி சாதனையை படைத்த அவர், இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே (148 கிலோ) மற்றும் மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது (147 கிலோ) ஆகியோரை முந்தி அப்பிரிவில் முதலிடம் பிடித்தார்.

தனது முதல் முயற்சியாக 145 கிலோ எடையைத் தேர்ந்தெடுத்த அவர், அதை மிக எளிதாக வெற்றிகரமாக தூக்கினார்.

மிகுந்த நம்பிக்கையுடன் 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் நுழைந்த அஜய பாபு தங்க பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலேசிய வீரர் இறுதியில் அவரை முந்தி சென்றார்.

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பளுதூக்கும் வீரர்களில் ஒருவராக கருதப்படும் அஜய் பாபு, அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் 79 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 335 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 152 கிலோ + கிளீன் & ஜெர்க் பிரிவில் 183 கிலோ) எடையை தூக்கி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்ததோடு, சாம்பியன்ஷிப் சாதனைகளையும் முறியடித்து தங்கப்பதக்கம் வென்றார்.