விளையாட்டு

இந்தியாவில் முதல்முறை: ஆண், பெண் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கும் மும்பை கிரிக்கெட் சங்கம்!

“அஜின்கியா ரஹானே உதவித்தொகை நிதி” என்ற பெயரில் கல்வி உதவித்தொகை நிதி அமைப்பு ஒன்றையும் மும்பை கிரிக்கெட் சங்கம் தொடங்கியுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என இருதரப்பினருக்கும் இனி சம ஊதியம் வழங்குவதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றிலேயே இருபாலினத்தவருக்கும் சம ஊதியம் வழங்கும் முதல் கிரிக்கெட் சங்கம் என்றப் பெருமையை பெறுகிறது. 2026-2027ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசனில் இருந்து இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.

ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ஒப்பந்தங்கள் இறுதியாகியுள்ளன. பிசிசிஐ- இன் மத்திய ஒப்பந்தத்தில் இல்லாத மற்றும் பிற முக்கியப் பட்டியல்களில் இடம் பெறாத உள்நாட்டு வீரர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த ஒப்பந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 22 வீரர்கள் (14 ஆண்கள் மற்றும் 8 பெண்கள்) இந்த ஒப்பந்தத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று தரவரிசைகளின்கீழ் ஊதியம் வழங்கப்படும். அதன்படி கிரேடு ‘ஏ’ பிரிவினருக்கு ரூ.12 லட்சமும், கிரேடு ‘பி’ பிரிவினருக்கு ரூ.8 லட்சமும், கிரேடு ‘சி’ பிரிவினருக்கு ரூ.6 லட்சமும் ஆண்டுக்கு வழங்கப்படும்.

ஆண்டு ஊதியத்தைத் தவிர, ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கான ஊதியம், தினசரிப் படிகள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகள் தனியாக வழங்கப்படும்.

இது தவிர, சமீபத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கேப்டன் அஜின்கியா ரஹானேவின் பெயரில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்க “அஜின்கியா ரஹானே உதவித்தொகை நிதி” என்ற பெயரில் கல்வி உதவித்தொகை நிதி அமைப்பு ஒன்றையும் மும்பை கிரிக்கெட் சங்கம் தொடங்கியுள்ளது.