இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
5 போட்டி கொண்ட தொடரில் 3 ஆட்டத்தின் முடிவில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.
ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் பதிலடி கொடுத்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.
இந்தநிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடைசி வீரர் வரை அதிரடியாக விளையாட கூடியவர் என்று இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வெஸ்ட் இண்டீஸ் மிகவும் சிறந்த அணிகளில் ஒன்றாகும். குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் அவர்கள் நன்றாக விளையாட கூடியவர்கள். அந்த அணி வீரர்கள் பல்வேறு நாடுகளிலும் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் ஆடுகிறார்கள் .
அதனால் அவர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும். அவர்களது பலம் நம்பமுடியாத அளவுக்கு உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள வீரர்கள் அனைவருமே அதிரடியாக ஆடக் கூடியவர்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமின்றி அணியில் உள்ள ஒவ்வொரும் அபாரமாக விளையாடக் கூடியவர்கள்.
11-வது வீரராக களம் இறங்குபவரும் கூட அதிரடியாக ஆடுவார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்டினை வீழ்த்தும் வரை ஆட்டம் முடியாது.
வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட அந்த அணிக்கு எதிராக சற்றும் கவனக்குறைவாக இருக்க முடியாது. 2-வது போட்டியில் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் ரன்களை குவித்து கொண்டு இருந்தபோது சற்று தற்காப்புடன் ஆடினோம். அதன்பிறகு ஒரு அணியாக நாம் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆக்ரோஷத்தை காட்டலாம் என்று பயிற்சியாளர் காம்பீர் தெரிவித்தார்.
3-வது வரிசையில் பேட்டிங் செய்வதையே நான் மிகவும் விரும்புகிறேன். இதை பலமுறை கூறி இருக்கிறேன். அந்த அழுத்தத்தை நான் எப்போதும் விரும்புகிறேன். அணிக்கு எனது தேவை இருக்கும்போது பொறுப்பேற்று செயல்பட விரும்புகிறேன்.
விரைவாக விக்கெட்டுகள் விழுந்தால் என்னால் நிதானமாக ஆடி ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல முடியும். ஆனால் தொடக்க வீரர்களோ அல்லது முதல் 3 வரிசை பேட்ஸ்மேன்களோ 14 அல்லது 15-வது ஓவர் வரை விளையாடி இருந்தால் முதல் பந்தில் இருந்தே ஆட்டத்தின் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது எனக்கு தெரியும்.
இந்திய அணியின் துணை கேப்டனாக சொந்த (ஐதராபாத்) ரசிகர்களின் முன்பு விளையாடுவது எனக்கு பெருமையான தருணமாகும். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணமாக அமையும்.
இவ்வாறு திலக் வர்மா கூறியுள்ளார்.