வழிபாடு

வாரம் ஒரு தேவாரம்

பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாக கூறுவர்.

சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.

இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

புனை அழல் ஓம்புகை அந்தணாளர்

பொன்னடி நாள்தோறும் போற்றிஇசைப்ப

மனைகெழு மாடம் மலிந்தவீதி

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கனைவளர் கூர்எரி ஏந்தி ஆடும்

கணபதி ஈச்சரம் காமுறவே.

- திருஞானசம்பந்தர்

விளக்கம்:-

சிறப்பிக்கப்படும் வேள்வித் தீயை தமது கையால் உபசரிக்கும் அந்தணர்களின் திருவடியை நாள்தோறும் போற்றி, வேத கீதத்தால் வணங்கி, அத்தகையோரின் மாட மாளிகைகள் நிறைந்தது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! அரும்புகள் நிறைந்த சோலைகளும், குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியும் நெருப்பை திருக்கரத்தில் ஏந்தி கணபதி ஈச்சரத்தில் விரும்பி நடனம் ஆடுவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!