வழிபாடு

செல்வ வளம் தரும் ஆடி வெள்ளி மகாலட்சுமி வழிபாடு

ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.

வீட்டு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டால் பண மழையில் நனையலாம். பொருளை அள்ளிக் கொடுக்கும் மகாலட்சுமியை திருமகள் என்கிறோம். 8 வகை லட்சுமிகளின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கையை நடத்த இயலும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை செந்தாமரை மலரை கொண்டு பூஜிக்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் தாமரை பூ போன்ற மகாலட்சுமிக்கு பிடித்தமான கோலங்களைப் போட வேண்டும். கோலம் போடும்பொழுது மகாலட்சுமியே வரவேண்டும் என்று சுலோகங்கள் சொல்லிக்கொண்டே போட வேண்டும்.

அர்ச்சனை

குத்து விளக்கை முந்தைய நாள் இரவே தேய்த்து குங்குமம் வைத்து ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து பூமாலை கொண்டு அலங்கரித்து பஞ்சு திரி போட்டு குளம் போல எண்ணெய் அல்லது நெய் விட்டு தீபச் சுடர் கிழக்கு முகமாக இருக்குமாறு விளக்கை ஏற்ற வேண்டும். மகாலட்சுமி படத்திற்கு பொட்டிட்டு பூக்கள் அலங்கரித்து உதிரி பூக்களால் மகாலட்சுமி அஷ்டோத்திரங்களைக் கூறி அர்ச்சனை செய்து அம்மனுக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம் வருகிறது.

ஆடி வேல் விழா

இலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா ஆடிவேல் வைபவம். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என அழைக்கிறார்கள். கதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்க பக்த பெருமக்கள் பெருந்திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.

ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்த ஆடி பவுர்ணமி

ஆடி மாத பவுர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்! அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பவுர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பவுர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும் ஞானமும் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்.