செல்வாக்கு உயரும் வாரம். ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவான் டிசம்பர் மாதத்தில் 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானம் செல்கிறார். அதன் பிறகு வாழ்க்கையில் சில நல்ல முக்கிய திருப்பங்கள் நடக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். அலைக்கழித்த வம்பு வழக்கிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். குடும்பத்திற்காக கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் குறையத் துவங்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். தொழில் துறையில், வேலையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். 4.8.2026 அன்று இரவு 9.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச் சோர்வு அடைவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து வழிபடவும்.
மகிழ்ச்சியான ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் குருவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். கடன் தொல்லை அகலும். போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். பார்த்துச் சென்ற வரனின் முடிவிற்காக காத்து இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். திருமண முயற்சியை ஒரு வாரம் ஒத்தி வைக்கலாம். வீட்டு வாடகை உயரும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் அதிகரிக்கும். எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். 4.8.2026 அன்று இரவு 9.54 மணி முதல் 6.8.2026 அன்று நள்ளிரவு 1.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச்சுமையால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். கோபத்தை குறைக்க வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று கன்னிப் பெண்களுக்கு உணவு தானம் வழங்கவும்.
தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் நீச்சம் அடைந்து செவ்வாய் மற்றும் சனியின் பார்வையை பெறுகிறார். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். தாய் அல்லது தந்தையின் அரசாங்க வாரிசு வேலை கிடைக்கும். பணக்கஷ்டம், கடன் பாதிப்பு இருக்காது. முக்கியமான தேவைகள் நிறைவேறும். திருமணத்தடை அகலும். சிலருக்கு இனம் குலம் மாறிய திருமணம் நடக்கும். 6.8.2026 அன்று நள்ளிரவு 1.53 மணி முதல் 9.8.2026 அன்று அதிகாலை 3.49 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் விரும்பிய வேலையில் சேர சிபாரிசுக்கு அலைய நேரும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கூழ் படைத்து அம்மன் வழிபாடு செய்யவும்.
வாழ்நாள் லட்சியங்களை, எண்ணங்களை கனவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றக் கூடிய முயற்சிகளில் ஈடுபட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்தாலும் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் நல்ல வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. திருமணம், புத்திரப் பிராப்தம் வீடு வாகன யோகம் போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். உங்களின் தோற்றம், செயல்பாடு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். தடைபட்ட செயல்கள் வெகு விரைவில் செயலாக்கம் பெறும். குடும்ப உறுப்பினர்களிடையே அனுகூலமான சூழல் உருவாகும். சகல சௌபாக்கியமும் உருவாகும். தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். ஆடி செவ்வாய்க்கிழமை கொழுக்கட்டை படைத்து அம்மன் வழிபாடு செய்யவும்.