வழிபாடு

2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

தொழிலுக்காக அடிக்கடி பயணம் செய்ய நேரும்.

சிம்மம்

சுமாரான வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சூரியனுடன் கேது சேர்க்கை பெற்றுள்ளது கிரகண தோஷ அமைப்பாகும்.சுய ஜாதக ரீதியாக ராகு கேது தசை நடப்பவர்கள் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினருடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். விவாகரத்து வழக்கு சாதகமாகி கணவரிடம் இருந்து கோரிய ஜீவனாம்சம் கிடைக்கும். அரசு வகை ஆதாயம் உண்டு. தொழிலுக்காக அடிக்கடி பயணம் செய்ய நேரும். அடமானக் கடன்களுக்கு தவறாமல் வட்டி செலுத்தவும். நம்பகமற்ற இடத்தில் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்கவும். முக்கிய குடும்பத் தேவைக்கு எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். 1.9.2026 அன்று அதிகாலை 3.24 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் விரயங்களால், கொடுக்கல், வாங்கல் தகராறு போன்றவற்றால் மன சஞ்சலம் உண்டாகும். பவுர்ணமி அன்று சிவனை வழிபடவும்.

கன்னி

சந்தோஷமும் வெற்றியும் தேடி வரும் வாரம். வார இறுதியில் தன ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். வாடகை வீட்டுப் பிரச்சனையில் இருந்து விடுபட்டு நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். சிலருக்கு நல்ல வாடகை வீடு கிடைக்கும்.வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் நிம்மதியை அதிகரிக்கும். புதியதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். சமுதாய அந்தஸ்தான புதிய நண்பர்களின் நட்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திறமைகள் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சுப விசேஷ பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். 1.9.2026 அன்று அதிகாலை 3.24 முதல் 3.9.2026 அன்று காலை 7.26 வரை சந்திராஷ்டமம் உள்ளது. எவ்வளவு உண்மையாக, நேர்மையாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுப்பது கடினமாக இருக்கும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். இரவு நேரப் பயணங்களை தவிர்க்கவும். பவுர்ணமி அன்று மகாலட்சுமியை வழிபடவும்.

துலாம்

வாழ்க்கையில் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் புத்துணர்வாக செயல்படுவீர்கள். சவாலான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பேச்சாற்றலால் முக்கியகாரியங்களை சாதிக்க முடியும். தந்தை வர்க்கத்தால் பல நன்மைகள் ஏற்படும். தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்துவார்கள். மனக்கசப்புகள் மாறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். சிலரின் காதல் திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் இந்த வாரத்தில் உள்ளது. 3.9.2026 அன்று காலை 7.26 முதல் 5.9.2026 அன்று காலை 10.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்களை பத்திரமாக கையாள வேண்டும். சில நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்த முடியாது. பவுர்ணமி அன்று சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

விருச்சிகம்

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும் வாரம். குருவின் பார்வையால் ராசி பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். போதிய முதலீடு செய்து தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். அக்டோபர் மாத இறுதியில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு செல்வார். முக்கிய பணிகளை விரைந்து முடிப்பதால் நன்மைகளை அதிகரிக்க முடியும். வாக்கு வன்மை பெறும். குடும்பத்தில் தவறான வாக்கு பிரயோகத்தால் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் அகலும். ஒருவர் வருமானத்தில் நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு நிலையான வருமானம் வரத்துவங்கும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். சகோதரரிடையே நிலவிய ஒற்றுமையில்லாத நிலை சீராகும். இளைய சகோதரருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். 5.9.2026 அன்று காலை 10.18க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்திற்காக உங்கள் சந்தோஷங்களை தியாகம் செய்வீர்கள். பவுர்ணமி அன்று நீர் நிலைகளில் புனித நீராடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406