பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் கேதுவுடன் மிக நெருக்கமாக பயணிக்கிறார். உணவு சுகபோகம் ஆகியவற்றில் நாட்டம் குறையும். சிலர் பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். அல்லது அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது உத்தமம் ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். திருமண முயற்சியில் ஏற்ற இறக்கமான பலன் உண்டு. பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்கள் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளை அரவணைத்து செல்லவும். காழ்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த உடன் பிறப்பு உங்களை புரிந்து கொள்வார். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும். பங்குச் சந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் சுய ஜாதக சாதக பாதகம் அறிந்து ஈடுபடவும். கற்பனை, கனவுகள் நினைவாகும். அரசியல் பிரமுகர்கள் பதவியை தக்க வைக்க மேல் இடத்தின் ஆதரவு அவசியம்.பௌர்ணமி அன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
எதிர் நீச்சல் போட்டு பெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். அமோகமான மாற்றங்கள் ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். தைரியம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி சாதுர்யத்தால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிறர் புகழ வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும். சிலர் அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுப நிகழ்வுகளுக்கு தேவையான பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். சொந்த வீட்டுக் கனவு நனவாகும். ஆரோக்கிய முன்னேற்றம் மனதை மகிழ்விக்கும். குழந்தைகளின் அனுசரணை நிம்மதி தரும். பௌர்ணமி அன்று தேன் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
தாராள வரவு செலவால் மனம் மகிழும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். சுகம், மற்றும் அதிர்ஷ்டத்தின் மேல் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் இப்பொழுது உங்களுக்கு வசப்படும். தொட்டது துலங்கும். உபரி வருமானத்தால் பொருளாதார நிலை உயரும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். வீடுகட்டும் பணி துரிதமடையும். பூர்வீகத்திற்கு சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. குல தெய்வ அனுகிரகம் உள்ளது. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித் திறமை மிளிரும். அழகு, ஆடம்பர பொருட்களை விற்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாக இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம், வளைகாப்பு, நல்ல உத்தியோகம், உயர் கல்வி போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். பொதுக் காரியங்கள் மற்றும் தான தர்மத்தில் ஆர்வம் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். பௌர்ணமி அன்று வில்வம் சாற்றி சிவனை வழிபடவும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்பட வேண்டிய வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு, கேது சேர்க்கை உள்ளது.கிரகங்களின் சஞ்சாரம் சுமாராக உள்ளதால் நிதானமும், நம்பிக்கையும் உங்களை காப்பாற்றும். குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும். முதலீட்டாளர்களுக்கு வெளியூர் அல்லது வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. வரவும் செலவும் சரியாக சரியாக இருக்கும். போட்டி பந்தயங்களை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. திருமண வயதில் இருப்பவர்களுக்கு காலதாமதத் திருமணம் நல்லது. கோபத்தை குறைத்து ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ற மாற்றம் உண்டாகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. பௌர்ணமி அன்று விபூதி அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.