வழிபாடு

2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

சொந்த வீடு வாங்க அல்லது கட்டக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.

மேஷம்

வாழ்க்கையில் செட்டிலாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாயும் 9,12ம் அதிபதி குருவும் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த கால மனச் சோர்வுகள் நீங்கும். திடமான எண்ணத்தோடு அனைத்து காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை தொழில் முயற்சியில் சாதகமான பலன் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். எதிர்காலத்தில் மிக அதிகப்படியான சுப பலன்களை அனுபவிக்க இது திருப்பு முனையாக அமையும். நிலையான தொழில் வேலை அமையும். தாழ்வு மனப்பான்மை குறையும். 2,7ம் அதிபதி சுக்ரன் வக்ரமடைவதால் தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். சொந்த வீடு வாங்க அல்லது கட்டக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மறுதிருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள். வழக்கு, விசாரணைகள் சாதகமாகும். பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். மஹாளய அமாவாசை அன்று துவரம் பருப்பு சாதம் தானம் வழங்கவும்.

ரிஷபம்

சுமாரான வாரம். ராசி மற்றும் 6ம் அதிபதி சுக்ரன் வக்ரம் பெறுவதால் கடன் தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் சிறு சுணக்கம் உண்டாகும்.தாய் வழி உறவுகளை, தாய்மாமனை, அனுசரித்துச் செல்ல வேண்டும். புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் முதலீடுகளில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் நிலவிய கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு பிரிவினைகள் ஒரு முடிவிற்கு வரும். உங்கள் மனம் விரும்பும் தீர்வு இப்பொழுது கிடைக்கும். சொத்துதகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும். ஆரோக்கியம் மேன்மையடையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை கிடைக்கும். சிலர் புதிய பாலிசி எடுப்பார்கள். தந்தைக்கு கண், இருதயம் தொடர்பான சிகிச்சை செய்ய நேரும். உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பில் ஏற்பட்ட தடைகள் அகலும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. போட்டிகளைச் சமாளித்து கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். மஹாளய அமாவாசை அன்று சர்க்கரைப் பொங்கல் தானம் வழங்கவும்,

மிதுனம்

அதிர்ஷ்டம் நிறைந்த வாரம்.ராசி அதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பஞ்சங்கள் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.மிகுதியான பொருள் வரவு இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். சுய தொழிலில் விருத்தி உண்டாகும். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். அடிப்படை தேவைக்கு திணறியவர்கள் தாராள தன வரவால் தன்நிறைவு அடைவார்கள். தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.வீடு கட்டுதல், மற்றும் வாங்குதல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். வங்கியில் கடன் உதவி பெறுவதற்கு ஏற்ற காலம்.பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள். சேமிப்புகள் உயரும்.மஹாளய அமாவாசை அன்று வெண்பொங்கல் தானம் வழங்கவும்.

கடகம்

மனோதைரியம் அதிகரிக்கும் வாரம். ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் மாத இறுதியில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செல்கிறார். அதற்கான பலன்கள் தற்போதே தெரியத் துவங்கும். தனித்திறமைகள் மிளிரும். உங்கள் நீண்ட காலத் திட்டங்களும் கனவுகளும், நியாயமான ஆசைகளும் நிறைவேறும். சேமிப்பு உயரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சிதரும். பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தைப் பெற்றுத்தரும். நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். பங்குதாரர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். பணம் பல வழிகளில் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். சகோதர, சகோதரிகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சிலர் மன நிம்மதிக்காக வீடு மாறுவார்கள். அரசு வேலை கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம். நோய் தாக்கம் குறையும். ஆரோக்கிய குறைபாடு சீராகும். மாமனார் மூலம் பூமி வயல், தோட்டம் கிடைக்கும் அல்லது என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். மஹாளய அமாவாசை அன்று புனித நீர் நிலைகளில் நீராடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT