எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் நீச்சம் பெற்று குருடன் சேர்க்கை பெறுகிறார். இது நீச்சபங்க ராஜயோக அமைப்பாகும். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் இது. அரசு வகை ஆதாயம் உண்டு. கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. பயணங்களால் பயன் கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த மகனுக்கு வேலை கிடைத்து விடும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். 16.9.2026 அன்று காலை 10.49 முதல் 18.9.2026 இரவு 10.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் பெறுவது, கடன் கொடுப்பது, ஜாமீன் போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறலை தவிர்த்து பக்குவமாக நடந்து கொள்ளவும். புதிய முயற்சியில் வெற்றியும், லாபமும் பெற சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து வழிபடவும்.
வேதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுகிறார். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் முத்தாய்ப்பான பலன் தரும். குலத்தொழில் செய்பவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். 18.9.2026 இரவு 10.45 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். தேவையற்ற வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். மகிழ்ச்சியை அதிகரிக்க காலபைரவரை வழிபடவும்.
திட்டமிட்டு வெற்றிபெறும் வாரம். தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் குரு செவ்வாய் சேர்க்கை உள்ளது. சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். வியாபாரம் பெருகும். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். கூச்சல் குழப்பம் மறைந்து குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். வேலை மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத் தரும். அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை, பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். மகிழ்ச்சியை அதிகரிக்க சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
மனக்குறை தீரும் வாரம்.குரு பகவான் ஜென்ம ராசியில் 5,10ம் அதிபதி செவ்வாயுடன் சஞ்சரிப்பதால் நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.பல வருடங்களாக புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். திருமணத்தடை அகலும். தடைப்பட்ட பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.