வழிபாடு

2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் பதவி உயர்வு நிச்சயம்.

மேஷம்

பொருளாதாரம் மேன்மை உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு 2,7ம் அதிபதியான சுக்கிரன் சம சப்தம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். கிரகங்களின் சாதக நிலை மாற்றம், ஏற்றத்தை தரும். தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். முதலீட்டாளர்களை புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். ஏற்றுமதி, இறக்குமதி, கமிஷன், தரகு தொழில் செய்பவர்களும் நல்ல முன்னேற்றம் உண்டு. நம்பகமான புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். குறைந்த உழைப்பில் நிறைந்த ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் பதவி உயர்வு நிச்சயம். சாஸ்திர ஈடுபாடு, ஆன்மீக நாட்டம் ஏற்படும். கடன் தொல்லை தீரும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு பல முறை படித்துப் பார்த்து வக்கீல் ஆலோசனைக்குப் பிறகு கையெழுத்திடவும். பெண்கள் கணவரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபட நல்லது மட்டும் நடக்கும்.

ரிஷபம்

தடை தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். விரைந்து வேகமாக செயல்படுவீர்கள். தொட்டது துலங்கும். பட்டது பூக்கும். புதிய மாற்றம் உண்டாகும். சம்பாதிக்கும் பணம் உபரியாகும். லாபத்தை முறையாக சேமித்து வைத்துக் கொண்டால் கிரக சூழ்நிலை சாதகமற்று இருக்கும் காலங்களில் நிம்மதியாக இருக்க முடியும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். திருமணம் ஆன தம்பதிகள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை இன்பமாகும். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமண முயற்சியில் ஈடுபட வேண்டும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடக்கும். எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் மகிழ்விக்கும். குலதெய்வத்தின் நல்லாசிகள் கிடைக்கும். ஊரின் எல்லை தெய்வம் காவல் தெய்வங்களை வழிபட நினைத்ததை சாதிக்கக்கூடிய வல்லமை உண்டாகும்.

மிதுனம்

முயற்சிகள் சாதகமாகும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் அடைகிறார். இதுவரை தடை தாமதத்தை ஏற்படுத்திய அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும். மனபலம் தைரியம் அதிகரிக்கும். பொருள் வரவு, அதிர்ஷ்டத்தை மிகைப்படுத்தும். வெகு நாட்களாக வாட்டிய கடன் தொல்லையில் இருந்து மீள தேவையான தனலாபம் உண்டாகும். வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய இடப்பெயர்ச்சி நடக்கும். ஊர் மாற்றம் வேலை மாற்றம் பதவி மாற்றம் வரலாம். பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டு. ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய அமைப்புகள் உள்ளது. வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். ஆரோக்கியத்தில் நிலவிய பாதிப்புகள் அகலும். பள்ளி கல்லூரி படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். பெண்களுக்கு தாய் வழியில் சொத்துக்கள், பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக இயக்கங்களில் இணையலாம். விநாயகர் வழிபாட்டில் வினைகள் அகலும்.

கடகம்

எதிர்ப்புகள் அகலும் வாரம். சுகஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த எதிர்ப்புகள் அகலும். விதியை மதியால் வெல்லும் தைரியத்தால் எதையும் வெல்ல முடியும். ஒருவர் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தில் உயர்ந்து நிற்கும். வரா கடன்கள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகி கடனை அடைக்க கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வீடு வாகன யோகம் என வளமான வாழ்க்கையை வாழ போகிறீர்கள். தான தர்மம் செய்து சமூக மரியாதையை அதிகரிப்பீர்கள். அரசு சார்ந்த துறை மூலம் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். ஜென்ம குருவால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். எதையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.லெளகீக நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும்.சிலர் தொழில் உத்தியோகத்திற்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும்.மாணவ மாணவிகள் மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெறுவார்கள்.விநாயகர் அகவல் படிக்க நிறைந்த ஆயுள், ஆரோக்கியம் உண்டு.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT