மேஷம்
சகாயமான வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் உச்சம் பெறுகிறார்.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். தனித்திறமைகள் வெளிப்படும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கவுரவப் பதவிகள், இழந்த பதவிகள் கிடைக்கும்.பூர்வீகம், குலதெய்வம், குழந்தை சார்ந்த செயல்களால் ஆதாயம் ஏற்படும்.
தொழிலில் லாபம் வருவதற்கு புதிய முயற்சிகளை, யுக்திகளை கடைபிடிப்பீர்கள். எதிரிகளை அடக்க முடியும் என்பதால் பொது வாழ்வில் இருப்பவர் களுக்கு மேன்மையான காலம். வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வாதாரம் உயரும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை கூடும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். கணவன்,மனைவி ஒற்றுமை பலப்படும். தமிழ் புத்தாண்டு அன்று நீர்மோர் தானம் வழங்கவும்.
ரிஷபம்
முன்னேற்றம் அதிரிக்கும் வாரம்.2,5ம் அதிபதி புதன் 8,11ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். எதிர்பாராத தன லாபம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என விரும்பத் தகுந்த மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் சகாயங்கள் உண்டாகும். தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு, வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும்.
பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும்.கூட்டுத் தொழிலால் ஆதாயம் கூடும். தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட ஈகோ தணியும்.மன வலிமை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். அதிர்ஷ்டம், தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். வராக் கடன்கள் வசூலாகும்.கடன் சுமை குறையும். ரிஷப ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். சிலரின் ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும். தமிழ் புத்தாண்டு அன்று குளிர்பானம் தானம் வழங்கவும்.
மிதுனம்
தொழிலில் மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் 7,10ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். இது நீச்ச பங்க ராஜயோகமாகும். எதிர் நீச்சல் போட்டு உழைத்து ஆதாயத்தை அதிகரிப்பீர்கள். தொழில் வளர்ச்சியால் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். அதிக நேரம் உழைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உள்ளது. அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். திருமணத் தடை அகலும். குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவும் அதிகரிக்கும்.13.4.2026 அன்று மாலை 3.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஓரிரு நாள் ஒத்திவைக்கவும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சம்மந்திகளிடம் நயந்து பேசவும். நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் புதிய தொழில் ஒப்பந்தம், பணப்பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கவும். தமிழ் புத்தாண்டு அன்று பானகம் தானம் வழங்கவும்.
கடகம்
உழைப்பின் பயனை அடையும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். திருமணத்தடை அகலும். புத்திரப் பிராப்தம், பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.
சில வாரங்களில் நிகழப்போகும் குருப் பெயர்ச்சியால் நல்ல மாற்றங்கள் இப்பொழுதே தெரியத் துவங்கும்.வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். 13.4.2026 அன்று மாலை 3.44 மணி முதல் 15.4.2026 அன்று காலை 9.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பான தடாலடியான முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். தமிழ் புத்தாண்டு அன்று தண்ணீர் தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406