வழிபாடு

2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

குடும்ப வாழ்வில் நாட்டம்குறைவு உருவாகும். கடன் தொல்லை அதிகரிக்கும்.

தனுசு

கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசிக்கு 6ம் அதிபதியான சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் மன ஆற்றலும், மன உறுதியும் கொண்ட நீங்கள் எந்தப் பிரச்சினையையும் கண்டு சோர்ந்து போக மாட்டீர்கள். முக்கியமான பிரச்சினை வம்பு, வழக்குகளில் தலையிடாமல் தாமரைஇலை தண்ணீர் போல் விலகி விடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு பயணத்தில் தடை, தாமதம் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளுடன் மனகசப்பு உண்டாகும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்க வேண்டும்.

குடும்ப வாழ்வில் நாட்டம்குறைவு உருவாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். முக்கிய ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. வைத்தியத்தில் ஆரோக்கிய முன்னேற்றம் உண்டாகும். அர்ச்சகர்கள் புரோகிதர்களுக்கு வஸ்திரதானம் வழங்கவும்.

மகரம்

அதிர்ஷ்ட தேவதை அரவணைக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெற்று உள்ளார். அடுத்த மாதம் நடக்கப் போகும் குருப் பெயர்ச்சி மகர ராசியினருக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்கித்தரும். ஆன்ம பலம் பெருகும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஓடி வந்து நிற்கும். அறிவாற்றல் பெருகும். எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவீர்கள். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. தொழிலில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும்.

அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும். திருமண வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு நீர்மோர் தானம் வழங்கவும்.

கும்பம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியை பக்க பலமாக பார்த்து ராகுவின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய குரு பகவானின் பார்வை வெகு விரைவில் மறையப் போகிறது. சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். சிலருக்கு தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பிரியும் நிலை ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள்.

சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். மண வாழ்க்கையில் பிரிவை சந்தித்தவர்களுக்கு மறுதுணை அமையும். கடன் பெறும் போதும், கடன் கொடுக்கும் போதும் படித்துப் பார்த்து கையெழுத்து போட வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. தடாலடியான நடவடிக்கைள், புதிய முயற்சிகள் ஆகியவற்றைக் தவிர்க்கவும். பேச்சில் சிந்தனையில், கவனத்துடன் இருக்க வேண்டும். அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும். சனிக்கிழமை சர்க்கரை தானம் வழங்கவும்.

மீனம்

நினைப்பதெல்லாம் நடைபெறும் அற்புதமான வாரம். ராசியில் உள்ள ஜென்ம சனிக்கு வெகு விரைவில் குரு பார்வை கிடைக்கப் போகிறது அதன் பலன் தற்போது தெரிய துவங்கும். குல தெய்வமே குழந்தையாய் வந்து பிறக்கும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகமான நன்மைகள் உண்டு. வேலை செய்யுமிடத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டு. ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். வியாதிகளால் ஏற்பட்ட தாக்கம் குறையும். அனைத்து பணிகளிலும் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

முறையான ஆவணங்கள் உள்ள சட்டரீதியான சொத்து, வாஸ்து குற்றம் இல்லாத வீடு, மனை உங்களுக்கு கிடைக்கும். மனதிலிருந்த இனம் புரியாத பயம் விலகி தெளிவும், துணிவும் பிறக்கும். விரோதிகளால் உண்டான கெடுதல்கள், தொல்லைகள் விலகி வாழ்வில் நிம்மதி பிறக்கப் போகிறது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத சில பிரச்சனைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்க முடியும். மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். சிவனடியார்களுக்கு உணவு உடை தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406