வழிபாடு

2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

கடன் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கும் நேரம் என்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மேஷம்

கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் 3,6-ம் அதிபதி புதன் சேர்க்கை பெறுகிறார். யாருடைய தயவையும் எதிர்பாராமல் நீங்களே நேரடியாக செயல்படுவீர்கள். நினைத்ததை செயல்படுத்தி வெற்றியடைவீர்கள். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் குடும்ப தேவைகளை நிறைவேற்றத் தேவையான பண வரவு உண்டாகும்.

உற்றார், உறவினர்களுடன் ஏற்பட்ட மன சங்கடங்கள் விலகும். தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உதயமாகும். எல்லாம் சாதகமாக இருந்தாலும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சிலர் கடன் பெறலாம் வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் செய்ய நேரும். 5.5.2026 அன்று பகல் 12.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் பரிவு மிகுதியால் ஜாமீன் சார்ந்த பிரச்சினையில் சிக்கலாம். கடன் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கும் நேரம் என்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டும். தினமும் தண்ணீர் தானம் வழங்கவும்.

ரிஷபம்

முயற்சியில் முனைப்புடன் செயல்படும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ராசியில் ஆட்சி பலம் பெற்றுள்ளார். இதற்கு 9,10-ம் அதிபதி சனியின் பார்வையும் உள்ளது. வேகமும் விவேகமும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட நெருடல், மன வேதனை மாறும். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற அனைத்து அவசிய தேவைகளுக்கும் கடன் கிடைக்கும். வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சி வெற்றி தரும். இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள்.

தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் செய்ய நேரும். புதிய வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு என விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். 5.5.2026 அன்று பகல் 12.54 முதல் 7.5.2026 அன்று நள்ளிரவு 1.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஜாமீன் மற்றும் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பயண அலைச்சலால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். தினமும் பட்சிகளுக்கு உணவிடவும்.

மிதுனம்

சங்கடங்கள் விலகும் வாரம். ராசியில் உள்ள குருபகவானின் பார்வை 5,7,9-ம்மிடங்களை புனிதப் படுத்துவதால் நாளை என்ன நடக்கும் என்ற பின் விளைவுகளை யோசித்து, உணர்ந்து செயல்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்ட திருமண முயற்சி துரிதமாகும். பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் அனுகூலமான பலன்கள் நடக்கும்.

குரு பகவான் ஜுன் 2 முதல் தன ஸ்தானத்திற்கு செல்வதால் அதன் பலன் தற்போதே தெரியத் துவங்கும். கடன் தொகை, எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து பண வரவு கிடைக்கும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 7.5.2026 அன்று நள்ளிரவு 1.26 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மனதை ஒரு நிலைப்படுத்தி செயல்பட வேண்டும். பாகப் பிரிவினையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வயதான தம்பதிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வர அனைத்து விதமான சுப பலன்களும் தேடி வரும்.

கடகம்

வாழ்க்கை தரம் உயரும் வாரம். வெகு விரைவில் குரு பகவான் ராசிக்குள் நுழைந்து உச்சம் அடைவதால் தரித்திரம், அவமானம், பண நெருக்கடி, தொழில் முடக்கம், நஷ்டம், உத்தியோகத்தில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை விலகத்துவங்கும். எதை எப்படி செய்ய வேண்டும், எதிரியை எப்படி வீழ்த்த வேண்டும் என்று தெளிந்து செயல்படுவீர்கள். அன்றாடம் அழியக் கூடிய பொருட்களான காய்கறி, பழம் வியாபாரம், மளிகைக்கடை, பால், தயிர், குளிர் பானங்கள் போன்ற பொருட்களை விற்பவர்களுக்கு வாழ்வியல் முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுவர். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள். ராசிக்கு இரண்டில் கேதுவும் எட்டில் ராகுவும் நிற்பதால் திருமண முயற்சியில் முன்னுக்கு பின் முரணான பதில் கிடைக்கும். சிலருக்கு அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்வதால் பெரிய சிரமங்கள் ஏற்படாது. திங்கட்கிழமை சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406