செல்வத்தை வாரி வழங்கக் கூடிய லட்சுமிதேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் தான் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் வருகிற 27-ந் தேதி பவுர்ணமி திதி வருவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நாளை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக் கூடிய இந்த விரதத்தை பெண்கள் அனுஷ்டிக்க வேண்டும். சில பண்டிகைகளையும், விரதங்களையும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே கொண்டாடலாம். அந்த வகையில் பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகை வரலட்சுமி விரதம்.
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து மலர்களால் பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, மங்கள பொருட்கள் சமர்பித்து, பழங்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். மகாலட்சுமியின் 108 திருநாமங்களை சொல்லும் லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளியை சொல்லியோ அல்லது ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்து வழிபடலாம்.
அதோடு சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு குங்குமம், மங்கள பொருட்கள், தாம்பூலம் ஆகியவற்றைக் கொடுத்து, வயதில் மூத்த சுமங்கலிகள் கைகளால் நோம்பு கயிறு கட்டிக் கொண்டு, அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.
வரலட்சுமி பூஜை அன்று வீட்டில் லட்சுமிக்கு குங்குமம், வாசனை மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், விளக்கு பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பு. பொருளாதார சிக்கல்கள், கடன் பிரச்சனைகள் இருந்தாலும் அது நீங்கி விடும். வீட்டில் வழக்கமாக வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் மட்டுமின்றி, புதிதாக வரலட்சுமி விரதம் இருக்க நினைப்பவர்களும் இந்த விரதத்தத்தை மேற்கொள்ளலாம். இதனால் மகாலட்சுமியின் அருளால் வாழ்க்கையில் மாற்றம் வரும். வரலட்சுமி விரதம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த விரதமாகும். தன்னை வேண்டுவோருக்கு கேட்கும் வரங்களை தரும் லட்சுமி என்பதால் அவளுக்கு வரலட்சுமி என்று பெயர்.
குடும்ப நலன், கணவரின் ஆயுள், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, செல்வ வளம், சுபிட்சம், குழந்தைகள் மற்றும் கணவரின் ஆயுள், ஆரோக்கியம், அமைதி ஆகியவற்றுடன் நிறைவாக வாழ்க்கை வேண்டி பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜைகள் செய்து வழிபட்டு, மகாலட்சுமியின் அருளையும் ஆசியையும் பெறுவதற்கான நாளாகும்.
இதை வரலட்சுமி நோன்பு, மாங்கல்ய நோன்பு, சுமங்கலி விரதம் என்பது உள்ளிட்ட பல பெயர்களின் மக்கள் குறிப்பிடுகிறார்கள். வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் அஷ்டலட்சுமிகள் எனப்படும் 8 லட்சுமிகளின் அருள் கிடைக்கும். அஸ்வமேத யாகம் நடத்தியதற்கு இணையான பலன் கிடைக்கும்.
இந்த நாளில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி, திருமணம் ஆகாத பெண்களும் நல்ல கணவர் அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு நோம்புக் கயிறு கட்டிக் கொண்டு, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவார்கள். சில பெண்கள் உடல் பிரச்னை காரணமாக இந்த வரலட்சுமி விரதத்தை வரும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்க முடியாவிட்டால், அடுத்து வரும் வெள்ளியன்று கடைப்பிடிக்கலாம்.
அப்போதும் கடைப்பிடிக்க முடியாத சூழல் நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற் கொண்டால் மகாலட்சுமியின் அருள் அப்போதும் பரிபூரணமாக கிடைக்கும். சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்பம் தலைத்தோங்கும். கன்னிப்பெண்கள் இந்த விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும்.