வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெரு முதல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் பூந்தோட்ட பள்ளி வளாகத் இருந்து பக்தர்களை போக்குவரத்து போலீசார் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக, சாமி தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர்.
திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் மீது உள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாககவசம் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் பவுர்ணமியையொட்டி திறக்கப்பட்டு 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆண்டுதோறும் இந்த 3 நாட்கள் மட்டுமே கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்யமுடியும்.
அதன்படி கார்த்திகை பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை ஆதிபுரீஸ்வரரின் கவசம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றப்பட்டது. கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய நேற்று முன்தினம் முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். கோவில் முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். நேற்று வரைசுமார் 2½லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
3-வது நாளாக இன்று வரை ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசனம் செய்யலாம். இன்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களில் இல்லாத வகையில் இன்று காலை ஒரே நேரத்தில் சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்ததால் திருவொற்றியூர் பகுதி குலுங்கி திணறியது.
வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெரு முதல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் பூந்தோட்ட பள்ளி வளாகத் இருந்து பக்தர்களை போக்குவரத்து போலீசார் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக, சாமி தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர். இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நான்கு மாட வீதிகளிலும் குவிந்து தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர், மோர், சிற்றுண்டி, இனிப்பு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு ஆதிபுரீஸ்வரர் மீது மீண்டும் தங்க கவசம் மூடப்படும்.