வழிபாடு

பிரம்மோற்சவ விழா: திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. நேற்று இரவு கொடியிறக்கம் நடந்தது.

மாலை மலர்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. அதையொட்டி 9-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகப் புறப்பட்டு கபிலதீர்த்தத்தில் உள்ள ஆழ்வார் தீர்த்தத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. கபிலத்தீர்த்தத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து தேவஸ்தான நிர்வாக கட்டிடம் எதிரே உள்ள பி.ஆர். தோட்டத்துக்கு உற்சவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை 5 மணிக்கு பி.ஆர்.தோட்டத்தில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு கோவிந்தராஜசாமி கோவிலை அடைந்தனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8.40 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கொடியிறக்கம் நடந்தது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.