வழிபாடு

திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா: வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா

சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக காட்சி அளித்தார்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா. கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று காலை உருகுசட்ட சேவை நடந்தது. தொடர்ந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

சுவாமி தரிசனம்

மாலையில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலா முடிந்து மேலக்கோவில் வந்த சுவாமிக்கு மீண்டும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

திருவிழா

8-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் சுவாமி சண்முகருக்கு பந்தல் மண்டபத்தில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேல் கோவில் சேர்தல் நடந்தது.

அலங்காரம்

தொடர்ந்து அங்கு சுவாமி சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவிலை அடைகிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயு கந்த பெருமானும், தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி விட்டு மேலக்கோவிலுக்கு வந்து சேர்கிறார்கள்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் ( 9-ந் தேதி) நடக்கிறது.

SCROLL FOR NEXT