வழிபாடு

பெண்கள் விரதம் இருந்து வழிபடும் முறை

அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு வருவது விசேஷம்.

பொதுவாக விரதம் இருந்து வழிபடும் நாட்கள் ஆண், பெண் இருபாலருக்கும் உகந்தது. என்றாலும் பெண்கள் கட்டாயம் வழிபடவேண்டிய சில நாட்கள் உண்டு. அவற்றுள் முக்கியமானது வாசவி ஜெயந்தி. இந்த நாளில் காலையில் எழுந்து நீராடி விளக்கேற்ற வேண்டும்.

கன்னிகா பரமேஸ்வரியின் திருவுருவப்படம் அல்லது ஏதேனும் அம்மனின் படத்துக்கு மலர் சாத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

தெரிந்த அம்மன் பாடல்களைப் பாடித் துதிக்கலாம். நிவேதனமாக நீர் மோர், பானகம் சமர்பித்து அதை அக்கம் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

விரத மிருப்பவர்கள் நாள் முழுவதும் சாதமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இரவு ஒரு வேளை மட்டும் சிற்றுண்டி போல எடுத்துக்கொள்ளலாம். அருகில் இருக்கும் அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு வருவது விசேஷம்.

எந்த அம்பாளாக இருந்தாலும், அந்த அம்மனை கன்னிகா பரமேஸ்வரி தாயாக நினைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அம்பாளுக்கு ஒரு டம்ளர் நீர்மோர், ஒரு டம்ளர் பானகம் நைவேத்தியமாக வைத்து, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாடு செய்ய வேண்டும்.

கன்னிகா பரமேஸ்வரி தாயை மனதார நினைத்து உங்களுக்கு என்ன பிரச்சினைகள் தீர வேண்டுமோ அந்த பிரச்சினைக்காக வேண்டுதல் வையுங்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணாக இருந்தால் நல்ல கணவர் அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டை செய்யலாம். திருமணம் ஆனவர்களாக இருந்தால் உங்கள் கணவரோடு நீண்ட நாட்கள் சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலை வைக்கலாம்.

உங்களுடைய குடும்பத்தில் ஏதேனும் பெண் சாபம் இருந்தால் அந்த சாபம் விலக வேண்டும் என்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பூஜை முடிந்தவுடன் நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் பருகலாம். குறிப்பாக உங்களுடைய வீட்டில் திருமணமாகாத பெண்கள் இருந்தால் அவர்களுடைய கையால் இந்த வழிபாட்டை செய்யச் சொல்லுங்கள். மிகவும் சிறப்பு. வாய்ப்புகள் கிடைத்தால் கன்னிகா பரமேஸ்வரிக்கு கண்ணாடி வளையல், ரிப்பன், பொட்டு, மஞ்சள் குங்குமம் போன்ற அழகு சாதன பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்வது நல்லது.

வீட்டுக்கு அருகில் இருக்கும் ஓரிரு கன்யா பெண்களை (பருவம் அடையாத 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள்) அழைத்து அவர்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கு நீர் மோர் பானகம் அருந்தக் கொடுத்து காலில் நலுங்கிட்டு அவர்களுக்கு ஏதேனும் இனிப்பு மற்றும் பரிசுப் பொருள் தந்து உபசரிக்கலாம்.

இவ்வாறு செய்வதால் கன்னிகா பரமேஸ்வரியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கிறார்கள் பெரியவர்கள்.

கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் உடலை வருத்தும் அளவுக்கு மிகப் பெரிய கடுமையான வேண்டுதல்கள், வழிபாடுகள் எதையும் செய்ய வேண்டியது இல்லை.

கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கும் பிரகாரத்தை அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்து வந்து வேண்டி கொண்டாலே போதும். அன்னையின் அருளை முழுமையாக பெற முடியும். அப்படி அடி மேல் அடி எடுத்து வலம் வரும்போது உள்ளம் உருக வேண்டி கொண்டால் அன்னையின் அருளை உடனே பெறலாம்.