மணவாளக்குறிச்சி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் மாசித் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு, பல்லக்கில் அம்மன் வீதிஉலா, சமய மாநாடு, யானை மீது களப பவனி, பஜனை, வில்லிசை, பரதநாட்டியம், இசை சொற்பொழிவு, ஆன்மீக உரை, மாபெரும் இசை சங்கமம் சொல்லரங்கம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழா நாட்களில் தினமும் அதிகமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இக்கோவில் திருவிழா நிறைவு விழா நேற்று நடந்தது. குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன, நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குடும்பத்துடன் கூட தொடங்கினர்.
ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் அதிகமான பக்தர்கள் கூடியிருந்தனர். அங்கு பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வெள்ளம் நேற்று முழுவதும் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தன.
நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், 3.30 அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், காலை 4.30 மணிக்கு அடியந்திரபூஜை, குத்தியோட்டமும் நடந்தது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9.30 மணிக்கு இன்னிசை விருந்தும், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.
மண்டைக்காடு தேவஸ்வம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோவிலுக்கு பவனியாக கொண்டுவரப்பட்டது.
2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது. அப்போது இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய்ப்பகுதி சிகப்பு துணியால் மூடி கட்டப்பட்டிருந்தது. உணவுப் பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக பொருத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஒடுக்கு பவனி வரும்போது கோவிலை சுற்றி அதிகமான பக்தர்கள் திரண்டு நின்றிருந்தனர். எந்தவித சத்தமும் கேட்காமல் அமைதியாக இந்த நிகழ்ச்சி நடந்தது. ஒடுக்கு பவனி கோவிலை ஒருமுறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது.
இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. தீபாராதனை நடந்தபோது கோவில் கொடிமரத்தில் கொடி இறக்கப்பட்டது. மண்டைக்காடு கோவில் விழாவில் நேற்று அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கியது.
அதுபோல் கேரள அரசு போக்குவரத்து கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கியது. திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.