கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோவிலில் இன்று காலை பங்கு தந்தைகள் திருப்பலி நடத்தினர் 
வழிபாடு

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் இன்று காலை திருப்பலி விழா

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவின் 2-ம் நாளான இன்று திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கு தந்தைகள், இருநாட்டு பக்தர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாலை மலர்

ராமேசுவரம்:

இந்திய-இலங்கை கடல் எல்லை பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 2 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் இந்திய- இலங்கை மீனவர்கள் மற்றும் பலர் பங்கேற்பார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க தமிழக பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி ராமேசுவரத்தில் இருந்து ஒரு நாட்டு படகு மற்றும் 3 விசைப்படகுகளில் 76 பேர் புறப்பட்டு அந்தோணியார் ஆலயம் சென்றனர். மாவட்ட வருவாய் அதிகாரி முத்து காமாட்சி கொடியசைத்து மீனவர்களின் பயணத்தை தொடங்கி வைத்தார்.

மீனவர்களின் படகுகள் பகல் 2 மணிக்கு அந்தோணியார் ஆலயத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற கொடியேற்றம், திருச்சிலுவை பாதை, திருப்பலி, நற்கருணை ஆசீர் போன்றவற்றில் தமிழக பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு தேர் பவனி நடந்தது.

இந்த விழாவில் ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தையும், திருவிழா கமிட்டியின் ஒருங்கிணைப்பாளருமான தேவசகாயம் தலைமையில் 4 பங்கு தந்தைகள், நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன், விசைப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, சகாயம், எமரிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டது. மீண்டும் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

இதில் பங்கு தந்தைகள், இருநாட்டு பக்தர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். திருவிழா நிறைவு பெற்றதை அடுத்து இந்திய பக்தர்கள் காலையில் கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் வந்தனர்.