அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. வடக்கன்குளம் வட்டார முதன்மைக்குரு ஜானி பிரிட்டோ தலைமை தாங்குகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறும். விழாவை ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.
வருகிற 11-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறும். 12-ந் தேதி மாலை ஆராதனையை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக் குரு பன்னீர் செல்வம் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். அன்று இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும்.
பத்தாம் திருவிழாவான 13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பெருவிழா மற்றும் உறுதிபூசுதல் விழா, கூட்டுத் திருப்பலி நடக்கிறது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். அன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 8:30 மணிக்கு தேரடி நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அழகப்பபுரம் பங்குத்தந்தை க. செல்வராயர், உதவிப் பங்குத் தந்தை ஞா. ஜார்ஜ் ஆன்றனி, பங்கு மேய்ப்புப்பணிக்குழு துணைத் தலைவர் வி.ஏ.எம். ராஜன், செயலாளர் டி.டி. செல்லத்துரை, துணைச் செயலாளர் ஜார்ஜ் மலர்க்கொடி, பொருளாளர் ஏ. மரிய ஜார்ஜ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.