பிரதோஷம், மாத சிவராத்திரி இவை இரண்டுமே சிவனுக்கு மிகவும் சிறப்புக்குரிய நாட்களாகும். இந்த இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் அற்புதமான பலன்களை அள்ளித்தரும். மாதந்தோறும் வரும் திரயோதசியை பிரதோஷம் என்றும், சதுர்த்தசியை மாத சிவராத்திரி என்றும் கொண்டாடுகிறோம்.
சில மாதங்களில் திரியோதசி, சதுர்த்தசி ஆகிய இரண்டு திதிகளும் ஒரே நாளில் இணைந்து வருவதுண்டு. இப்படி பிரதோஷமும், மாத சிவராத்திரியும் இணைந்து வரும் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த அற்புதமான நாளில் சிவ பெருமானை உரிய முறைப்படி வழிபட்டால் சிவ பெருமானின் பரிபூரண அருளை பெற முடியும்.
அதோடு வாழ்வில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு நாளை (புதன்கிழமை) பிரதோஷமும், சிவராத்திரியும் இணைந்து வருகிறது. அதுவும் புதன்கிழமையில் பிரதோஷமும், சிவராத்திரியும் வருவது இன்னும் கூடுதல் சிறப்பானதாகும்.
புதன்கிழமையில் வரும் பிரதோஷம் “சவும்ய வார பிரதோஷம்” என்று அழைக்கப்படுகிறது. இது கல்வி, ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
பிரதோஷ விரதம், மாத சிவராத்திரி விரதம் இரண்டுமே சிறப்புக்குரியது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் தடைகளில் இருந்து விடுபட முடியும். பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட முடியும்.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை கடைந்த போது, முதலில் வெளிப்பட்டது ஆலகாலம் எனப்படும் விஷம். இது பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு அனைவரையும் துரத்தத் தொடங்கியது. அனைவரும் இதைக் கண்டு நடுங்கிய போது, உலக உயிர்களை காப்பதற்காக சிவ பெருமான் அந்த ஆலகால விஷயத்தின் கடைசி துளி வரை பருகினார்.
விஷம் அருந்திய சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை என்றும் கூறப்படுகிறது. உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்.
சிவ-சக்தி ஐக்கியத்தின் அடையாளமாக போற்றப்படும் நாள் சிவராத்திரியாகும். தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாளை மாத சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இதுவே உலக உயிர்கள் தோன்றிய தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, தெய்வ அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக குறிப்பிடப்படுகிறது.
பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி இரண்டும் சிவனை வழிபட்டு, சிவனின் அருளை பெறுவதற்குரிய நாளாகும். இந்த நாளில் சிவலிங்கத்திற்கு சுத்த நீரால் அபிஷேகம் செய்வதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிவ புராணம் படிப்பதும், சிவனுக்குரிய மந்திரங்கள் ஜபம் செய்வதும், சிவனை நினைத்து தியானம் செய்வதும் மிக சிறப்பானதாகும்.
பூஜை ஏதும் நடத்துவதற்கு கூட வழி இல்லாமல் இருக்கும் சிவாலயங்களில் சென்று சுத்தம் செய்து, விளக்கேற்றி, அங்குள்ள சிவ லிங்கத்திற்கு வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்தால் கூட சிவனின் அளவில்லாத அருளையும் அளவில்லாத நன்மைகளையும் பெறமுடியும். இது சிவ வழிபாடுகளிலேயே மிகவும் உயர்ந்த உன்னத வழிபாடாக கருதப்படுகிறது.
பிரதோஷ விரதம் கடைபிடிக்கும் போது சிவபெருமான் சந்திரமவுலீஸ்வர கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த நாளில் வில்வ அர்ச்சனை செய்து வில்வாஷ்டகம் படிக்க நீண்ட ஆயுள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி, நிம்மதி கிடைக்கும்.
பாவங்கள் நீங்கி நன்மை பெருகும். படிக்கும் குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதும் குழந்தைகள் வீட்டில் இருப்பவர்கள் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அவர்களுக்கு புத்தி கூர்மை மேலும் தேர்வில் நன் மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
திருமண தடை நீங்கி வாழ்க்கையில் திருமண யோகம் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்த வழிபாடு உற்றத் துணையாக இருக்கிறது. தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்ற பழமொழிக்கு ஏற்ப, நாளை சிவ வழிபாடு செய்வது செல்வத்தை அள்ளித் தரும்.
தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்.
செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ, சிவராத்திரி வழிபாடு தான் சிறந்த நாள்.