சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள் 
வழிபாடு

சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்

சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு விருதுநகர், மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலை ஏறிச் சென்று இந்த கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும்.

பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களையொட்டி மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

நேற்று தை அமாவாசை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை மலை அடிவார கேட் பகுதியில் குவிய தொடங்கினர். விருதுநகர், மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

நேற்று காலை வனத்துறை கேட் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வனச்சரக அலுவலர் செல்லமணி, வனவர்கள் சின்ன கருப்பன், ஜெய்சங்கர் ஆகியோர் பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். நக்சல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் 25 பேர் மற்றும் வனத்துறையினர் 4 பேர் கொண்ட குழுவினர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் யாரேனும் மலைப்பகுதியில் சுற்றி திரிகிறார்களா என கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மதியம் 2 மணி அளவில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான ெபாருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மதுரை, ராஜபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் தாணிப்பாறைக்கு இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நீரோடை பகுதிகளில் தீயணைப்பு படையினர், போலீசார் நின்றிருந்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.