அமாவாசையை முன்னிட்டு தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்த பக்தர்கள் கூட்டம். 
வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் மலையேறி தரிசனம்

அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் தாணிப்பாறைக்கு இயக்கப்பட்டன.

அமாவாசை

வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வைகாசி மாத பிரதோஷம், நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் திரளான பக்தர்கள் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

அபிஷேகம்

இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி 3 மணி நேரம் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

சிறப்பு பஸ்கள்

வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், மதுரை, அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் தாணிப்பாறைக்கு இயக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்க சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு யுவராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.