கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது திரிபுரசம்ஹார சரம்தந்த பெருமாள் சரநாராயண பெருமாள் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு நரசிம்மர் சயன கோலத்தில் அருள் பாலிக்கும் ஒரே அரியதலம். மூலவர் சரநாராயன பெருமாள் 9 அடி உயரம் முழுவதும் சாலக்கிரா மத்தினால் ஆனவர். கருடாழ்வார் இந்த கோவிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார்.
இங்கு மாதம் தோறும் அமாவாசை தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல வைகாசி மாத அமாவாசை தினமான இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. வைகாசி அமாவாசை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து உற்சவர் பரமபத நாதனாக சிறப்பு மலர் அலங்காரத்தில் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி உள்பிரகார வலம்வரும் நிகழ்ச்சியும், கண்ணாடி அறை சேவை நடந்தது.
இதில் கடலூர், விழுப்புரம், புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் பட்டாச்சாரியார் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.