வழிபாடு

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா- தேரோட்டம் கோலாகலம்

வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

ஆடித்தபசு திருவிழா

பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயண ராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.

இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருநாள் கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் கோமதி அம்பாள் காலை தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் 9 -ம் திருநாளான இன்று ஆடித்தபசு திருவிழாவின் 9-ம் நாளை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் 6.30மணிக்கு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

கோமதி அம்மன்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருநாள் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று மாலை 6.05 மணிக்கு மேல் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணனராகவும், இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்கமாகவும் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

தேரோட்ட நிகழ்ச்சி

தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், முன்னாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் லட்சுமி, தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, தி.மு.க. மாணவரணி வெங்கடேஷ், இந்து முன்னணி ஆறுமுகசாமி, ஓய்வு பெற்ற தபால் அலுவலர் பாலகிருஷ்ணன், ரமேஷ், சபரிநாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போலீசார் பாதுகாப்பு

தேரோட்டத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறை

தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர். அதேபோல் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருநாள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளதால் சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.