தமிழர்களின் வாழ்வோடும் வளத்தோடும் பெருந்தொடர்பு கொண்டவை இந்து சமய வழிபாடுகள். வழிபாடுகளில், ஓரிரு நாட்கள் மட்டுமே அனுசரிக்கப்படும் விசேஷங்கள் அதிகம் உண்டு. ஆனால், ஒரு மாதம் முழுவதும் பெண்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் விசேஷம் என்றால் அது ஆடி மாத அம்மன் வழிபாடு மட்டும்தான்.
பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திரு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் 2 -வது நாளாக நேற்றிரவும் விடிய விடிய பொங்கலிட்டனர். 3-வது நாளாக இன்றும் கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வருகிறார்கள்.
மேலும் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், உருளு தண்டம் செய்தும், மாவிளக்கு ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறார்கள். இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள். கோவில் வளாகம் மற்றும் கோபுரம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ஆடி மாதம் 4-வது வெள்ளி கிழமையான நாளை (7-ந் தேதி) காலை 9.15 மணியளவில் நடைபெறுகிறது. இதற்கான கோவில் முன்பு நிறுத்தப்பட்டுள்ள தேர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். தேர் சென்று வரும் கடை வீதிகளில் நாளை காலை முதல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் பிரசித்தி பெற்ற வண்டி வேடிக்கை நடக்கிறது.
இதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்கின்றன. இதையொட்டி கோவில் சுற்றுப்புற பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.